இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்

2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதம் அளவுக்குச் சரியும் என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் கணித்துள்ளது.

வங்கியல்லாத நிதித்துறை கடும் நெருக்கடியில் இருந்தது. கிராமப்புற மக்களின் வருமானம், வளர்ச்சி குறைவு ஆகியவை நாட்டின் வளர்ச்சி குறைய முக்கியக் காரணம் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

டாவோஸ் நகரில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு தொடங்கிய நிலையில் ஐஎம்எப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 4.8 சதவீதமாகக் குறைத்துக் கணித்துள்ளது. அதேசமயம், 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக வளரும். 2021-ம் ஆண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநரும் இந்தியாவில் பிறந்தவருமான கீதா கோபிநாத் கூறுகையில், “ கிராமப்புற மக்களின் வருவாயில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாததும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதுமே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியக் காரணமாகும். உள்நாட்டில் பொருட்கள், சேவைகளின் தேவை மோசமான அளவில் குறைந்ததும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சிக்கலில் இருந்தது, கடன் வளர்ச்சிக் குறைவு போன்றவை முக்கியக் காரணங்கள்.


2020-ம் ஆண்டில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளான இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகியவற்றின் வளர்ச்சி சுமாராகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஐஎம்எப் அறிக்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அமைச்சர்களைக் கிண்டல் செய்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், ” இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து உண்மை நிலைவரத்தை ஐஎம்எப் தெரிவித்துள்ளது. அதன்படி 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். அதாவது 4.8 சதவீதம் அளவில்தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்குப் பின்புதான் 4.8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி கூட வந்துள்ளது. இந்த சதவீதத்துக்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி சரிந்தாலும் நான் வியப்படையமாட்டேன்.

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், முதன்முதலாக பண மதிப்பு நீக்கம் மோசமான நடவடிக்கை என்று விமர்சித்தவர். இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பையும் அவர் குறைத்துள்ளதால், கீதா கோபிநாத்தையும், ஐஎம்எப் அமைப்பையும் தாக்க மத்திய அமைச்சர்கள் தயாராவார்கள், அதற்கு நாம் தயாராக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top