என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் தேவையற்றது என வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறி உள்ளார்.

குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என்ற போதிலும் இந்த சட்டங்கள் தேவையில்லாத ஒன்று என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கருத்து தெரிவித்துள்ளார்

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், அரசியல் கட்சிகள், முஸ்லிம் போன்ற சிறுபான்மை  இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குவங்காளம், பஞ்சாப், கேரளா, போன்ற மாநில அரசுகள்  இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. 

இந்த நிலையில் இந்தியாவின் இந்த புதிய குடியுரிமைச் சட்டம் தேவையயற்றது என   வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தி கல்ஃப் நியூஸ் நாளேட்டுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சிஏஏ, என்ஆர்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் ” எதற்காக இந்திய அரசு இந்த சட்டங்களைக் கொண்டு வந்தார்கள் என எங்களுக்குப் புரியவில்லை. இப்போதைக்கு இந்த சட்டங்கள் தேவையில்லாத ஒன்று.

இந்தியா கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தால் அங்கிருந்து எந்த வங்கதேசத்தினரும் மீண்டும் திரும்பி வந்ததாக எந்த கணக்கீடும் இல்லை. ஆனால் இந்தியாவுக்குள் மக்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.

குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதில் வங்கதேசம் கவனமாக இருக்கிறது. இந்திய அரசும் இந்த இரு சட்டங்கள் தொடர்பாக இது உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுடெல்லிக்கு நான் வந்திருந்தபோது பிரதமர் மோடியும் இதே கருத்தைத்தான் என்னிடம் தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு தற்போது சிறப்பாக இருந்து வருகிறது. பல்வேறு துறைகளில் கூட்டுறவு வலுவாக இருக்கிறது” இவ்வாறு ஷேக் ஹசினா தெரிவித்தார்.

சமீபத்தில் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

” குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆனால் அதேசமயம், அந்நாட்டில் நிலவும் நிலையற்ற சூழல் அண்டை நாடுகளையும் பாதிக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top