இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர் ஆட்டத்தில் விராட் கோலி 89 ரன்கள், ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில்  ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா ஸ்மித்தின் சதம் (131) மற்றும் லாபஸ்சேன் (54) அரைசதம் ஆகியவற்றால் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் தவான் பேட்டிங் செய்ய வரவில்லை.

இதனால் ரோகித் சர்மா உடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா 8.1 ஓவரில் 50 ரன்னை தொட்டது.

அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ரோகித் சர்மா 56 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 20.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ஒருபக்கம் விராட் கோலி நிலைத்து நிற்க மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ரோகித் சர்மா 110 பந்தில் சதம் அடித்தார். ரோகித் சர்மா சதம் அடித்த பின் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் ஜெட் வேகத்தில் ஆட்டத்தை கொண்டு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா 128 பந்தில் 119 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்தது. ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். விராட் கோலி நிதானமாக விளையாட ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்தியா எளிதாக இலக்கை நோக்கிச் சென்றது. அணிக்கு 17 ரன்கள் தேவை என்றிருக்கும்போது விராட் கோலி 85 ரன்னில் இருந்தார். சதம் அடிப்பார் என்று நினைத்தபோது 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 25 பந்தில் 13 ரன்கள் தேவையிருந்தது.

ஷ்ரேயாஸ் அய்யருடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்து விளையாடினார். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னுடனும் மணிஷ் பாண்டே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top