குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது.

ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் 2-வது மாநிலமாக பஞ்சாப் அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2-ம் நாளான இன்று மாநில சட்ட அமைச்சர் பிரம்ம மொஹிந்திரா, மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.

அவர் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசம் முழுவதிலும் கொந்தளிப்பையும், அமைதியற்ற சூழலையும் ஏற்படுத்தி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் போராட்டங்கள் நடந்தாலும் அமைதியான முறையில் நடந்தன.

இந்த சுதந்திரமான, நியாயமான ஜனநாயகத்தில் இந்தச் சட்டத்தை அனைவருமே எதிர்க்கிறார்கள். இந்தச் சட்டம் பிரிவினையை ஏற்படுத்துகிறது. மதரீதியாகப் பிளவுபடுத்தி குடியுரிமையை வழங்குகிறது. நம் தேசத்தில் சில பிரிவு மக்களின் கலாச்சார அடையாளம், மொழி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இருக்கிறது. சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் அகதிகளைகக் கூட மதரீதியாக இந்தச் சட்டம் பிளவுபடுத்துகிறது. இந்தியாவின் அடையாளமான மதச்சார்பின்மையை மீறுகிறது. ஆதலால், மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் மதரீதியாக வேறுபாடு காட்டக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்” என்று சட்ட அமைச்சர் பிரம்ம மொஹிந்திரா தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் அமைச்சர் மொஹிந்திரா தாக்கல் செய்தபின் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் 2-வதாக பஞ்சாப் மாநிலமும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top