தேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இன்று டெல்லியில் நடத்தும் கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், முதலில் மறுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, தற்போது அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அரசு சார்பில் பிரதிநிதியை அனுப்பி வைப்போம் எனத் தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஆனால், குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு பாஜக ஆளாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் என்பிஆர் பணிகளைத் தொடங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், என்பிஆர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில் மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இந்தப் பணிகள் இடையூறு இன்றி, தடங்கலின்றி செல்ல வேண்டும் எனக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று டெல்லியில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களும் தங்களின் பிரதிநிதிகளான தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குநர்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளன.உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இணையமைச்சர் நித்தியானந்தா ராய், உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா, தேசிய பதிவாளர் தலைவர் விவேஷ் ஜோஷி ஆகியோர் தலைமையில் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் இன்று கூட்டம் நடக்கிறது.

ஆனால், இந்தக் கூட்டத்தில் தங்கள் மாநிலத்தின் சார்பில் பங்கேற்க முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால், இன்று நடக்கும் கூட்டத்தில் மேற்கு வங்க அரசு பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கேரள அரசு தொடக்கத்தில் அறிவித்தது. ஆனால், டெல்லியில் நடக்கும் இன்றைய கூட்டத்தில் கேரள அரசு சார்பில் தலைமைச் செயலாளர், இயக்குநர்கள் இன்று பங்கேற்பார்கள் என கேரள அரசு சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top