இந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு

இந்தியா, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல் படை வீரர்கள் இணைந்து வங்க கடலில் கூட்டு கடற்பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர்.

இந்தியா, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல் படை வீரர்கள் இணைந்து வங்க கடலில் கூட்டு கடற்பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதில் போர் கப்பல்கள், விமானங்களுடன் வீரர்கள் பங்கேற்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தபடி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவும், ஜப்பானும் கடலோர காவல்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒருமுறை இந்தியாவிலும் மறுமுறை ஜப்பானிலும் இந்த பயிற்சி நடந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது, ‘சாயோக் கஜின்’ என்ற பெயரில் கூட்டு கடற்பயிற்சிக்காக, ஜப்பான் நாட்டின் கடலோர காவல்படையைச் சேர்ந்த ‘எச்சிக்கோ’ ரோந்துக்கப்பலில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உள்பட 60 பேர் கடந்த 13-ந்தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தனர். பின்னர் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். தொடர்ந்து வங்க கடலில் நேற்று கூட்டு கடற்பயிற்சி நடந்தது. இதனை பார்வையிட ஐ.சி.ஜி. சவுரியா போர்க்கப்பலில், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், ஜப்பா கடலோர காவல் படை கமாண்டன்ட் அட்மிரல் தகாஹிரோ ஒகுஷிமா, கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி. பரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் வங்க கடலில், தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை நடந்தது. இதில் இந்திய கடலோர காவல் படையின், ஐ.சி.ஜி.வீரா, ஐ.சி.ஜி. அபீக், ஐ.சி.ஜி. சாகர், மஞ்சுஷா, சார்லி ரக ரோந்து கப்பல் சி-432, சி-440 உள்ளிட்ட 7 இந்திய கப்பல்கள் ஈடுபட்டன. அத்துடன் ‘டார்னியர்’ ரக குட்டி விமானம் மற்றும் 2 சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஜப்பான் கடலோர காவல் படை கப்பல் ‘எச்சிக்கோ’ மற்றும் ஒரு ஹெலிகாப்டரும் பயிற்சியில் ஈடுபட்டன.

சென்னைக்கு அருகே, வங்க கடலில் ‘மஞ்சுஷா’ என்ற பயணிகள் கப்பல் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டது. அந்த கப்பல் மீது, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குட்டி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து உயிர் காக்கும் மிதவைகள், கடலில் எறியப்பட்டன. கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை சுற்றிலும் இந்திய மற்றும் ஜப்பான் நாட்டு சிறிய கப்பல்கள் சுழன்று வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

பின்னர் ஒத்திகைக்காக கடலில் கடலோர காவல் படை வீரர் ஒருவர் தவறி விழுந்தார். பின்னர் கடலில் தனது இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில் சிகப்பு வண்ணத்தில் நெருப்பு குச்சி ஒன்றை உயர்த்தி காண்பித்தபடி மிதந்தார். உடனடியாக கடலோர காவல் படை ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள் அவரை கயிறு மூலம் மீட்டனர். அதனைத்தொடர்ந்து சார்லி வகையிலான சி-432, சி-440 ரக கப்பல்கள் மூலம் சரக்கு கப்பலில் ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

இறுதியாக, ஐ.சி.ஜி. சவுரியா போர்க்கப்பலின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அமர்ந்திருந்த இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் கே.நடராஜன், ஜப்பான் கடலோர காவல் படை கமாண்டன்ட் அட்மிரல் தாகஹிரோ ஒகுஷிமா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரு நாட்டு கப்பல்களும் அணிவகுத்து வந்தன. அதில் இருந்த வீரர்கள் மரியாதை செலுத்தினார்கள். அதேபோன்று தேசிய கொடியை பறக்கவிட்டபடி ஹெலிகாப்டர்களும், விமானமும் அணிவகுத்து வந்து அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தின. இவை அனைத்தும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

கூட்டு கடற்பயிற்சியின்போது இலக்கை நோக்கி சுடும் ஒத்திகை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்தப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்ததால் இந்த ஒத்திகை கைவிடப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top