தனிநபர் சுதந்திரம் முக்கியம்; இணையதள கட்டுப்பாடுகளை மத்திய அரசு மீளாய்வு செய்ய வேண்டும்;சுப்ரீம் கோர்ட்

காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் மீளாய்வு செய்ய வேண்டும் இணையதளத்தின் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ,தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பை காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, இணைய வசதி, லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த முறை கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டனர். 

பிற மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பாசின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மனு மீதான தீர்ப்பின்போது உச்சநீதிமன்றம் கூறுகையில், “இணையம் என்பது கருத்துரிமையின் ஒரு பகுதி. தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அசாதரண சூழ்நிலையில்தான் இணையதளத்தை முடக்க வேண்டும். காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது.

இணையதளத்தின் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பது அடிப்படை உரிமை.  இணையதள கட்டுப்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் மீளாய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top