அமெரிக்க படையினர் அனைவரும் பயங்கரவாதிகள்- ஈரான் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

ஈரான் ராணுவ தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க படைவீரர்கள் அனைவரையும் ஈரான் அரசு பயங்கரவாதிகளாக அறிவித்தது

அமெரிக்கா ஈரான் இடையேயான பிரச்சினைகள் ஏராளம். அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 3ம் தேதி அமெரிக்கா நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த மனிதரான ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, அனைத்து அமெரிக்க படைகள் மற்றும் ராணுவ ஊழியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் மசோதா இன்று ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அந்த மசோதாவில், ‘அனைத்து அமெரிக்க படைகள், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் அதோடு தொடர்புடைய நிறுவனங்கள், சுலைமானியை கொல்ல உத்தரவிட்ட அதிகாரிகள் என அனைவரும் பயங்கரவாதிகளாவர். 

அமெரிக்காவின் ராணுவம், உளவுத்துறை, நிதி, தொழில்நுட்பம், சேவை அல்லது தளவாடங்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு செய்யப்படும் எந்தவொரு உதவியும் பயங்கரவாத செயலுக்கான ஒத்துழைப்பாக கருதப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது, அமெரிக்காவை பயங்கரவாதத்திற்கு ஆதரவான அரசாகவும், பிராந்தியத்தில் உள்ள அதன் படைகளை பயங்கரவாத குழுக்களாகவும் அறிவித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top