ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விமான ஊழல் சம்பந்தமாக 6 மணி நேரம் விசாரணை

விமான ஊழல் வழக்கு சம்பந்தமாக ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏறத்தாழ 6 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2005-ம் ஆண்டு பதவியில் இருந்தபோது, சிவில் விமான போக்குவரத்து துறைக்கு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களையும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களையும் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக பாஜக நம்புகிறது


குறிப்பாக ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டபோது, அந்த நிறுவனம் 175 மில்லியன் டாலர் மதிப்பில் (சுமார் ரூ.1,225 கோடி) பயிற்சி மையம்,, பராமரிப்பு, பழுது பார்ப்பு மையங்களை கட்டித்தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையுடன்தான் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதற்கான திட்ட முன்வடிவு, பாதுகாப்பு துறைக்கான மந்திரிகள் குழுவுக்கு போய் உள்ளது. ஆனால் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் வழங்கியபோது இந்த நிபந்தனையை நீக்கி விட்டனர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், லாபகரமாக இருந்த வழித்தடங்களை எமிரேட்ஸ், ஏர் அரேபியா, கத்தார் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததில், ஏர் இந்தியா நஷ்டம் அடைந்துள்ளது; ஆனால் இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகர் தீபக் தல்வாருக்கு ரூ.272 கோடி கமிஷன் தரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக 2017-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் தரகர் தீபக் தல்வார் கைது செய்யப்பட்டு விட்டார். சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்துகிறது. ஏற்கனவே, சிவில் விமான போக்குவரத்து மந்திரியாக பதவி வகித்த பிரபுல் பட்டேலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மீதும் அமலாக்கப்பிரிவின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. அவரது தலைமையில் இருந்த மந்திரிகள் குழுதான், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இதில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு முடிவு செய்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆகஸ்டு 21-ந் தேதியே ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டார். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு சி.பி.ஐ. வழக்கில் அக்டோபர் 22-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அமலாக்கப்பிரிவு வழக்கில் கடந்த மாதம் 4-ந் தேதி நிபந்தனை ஜாமீன் அளித்தது. இதையடுத்து, 106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் விமான ஊழல் வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பேரில் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தில் நேற்று ஆஜர் ஆனார். அவரிடம் ஏறத்தாழ 6 மணி நேரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜரானது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top