ஊராட்சி தேர்தலில் தோல்வி எதிரொலி;நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கிறது என்று பொதுமக்களும், எதிர்கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் கூறிவந்தன.

ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பெரும் துயரத்தை தந்தபோதும், தமிழக அரசு மத்திய அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை நடத்தியே வந்தது.

இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி தேர்தலை சந்திக்கவேண்டிய நிலை தமிழக அரசுக்கு வந்தது. ஊராட்சி தேர்தலில் ஆளும் அதிமுக அரசு பெரும் பணம் செலவு செய்தும் தோல்வியை  சந்திக்கும் நிலையே வந்தது. அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் வரும் சூழலில் இந்த தோல்வி அதிமுக அரசை நடுங்க செய்து விட்டது.அடுத்த ஆண்டு பொது தேர்தலுக்கு இப்போதே தயாராகும் பொருட்டு மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை ஒவ்வொன்றாக கலைந்துவிடுவது என்ற திட்டத்திற்கு வந்திருக்கிறது அதிமுக அரசு  

அதன் முதல்கட்டமாக, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விண்ணபிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

2017 மற்றும் 2018ல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top