பயிற்சியற்ற ஊழியர்கள்; தேர்தல்ஆணையத்தின் தோல்வி! ஊரக உள்ளாட்சி முடிவுகள் தாமதம்!

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பல்வேறு இடங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது அனுபவம் இல்லாத ஊழியர்களை முறையான பயிற்சி எடுக்காமல் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டதால் வாக்குச்சீட்டுகள் பிரிப்பது, எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது. நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கரூர் உள்பட 9 மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.மற்ற மாவட்டங்களில் பல குளறுபடிகள் நிகழ்ந்து உள்ளது

மாவட்டக் கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணி முடிந்து பல மணி நேரமாகியும் முன்னிலை விவரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களும் எண்ணிக்கை முடிவுகளை எந்த அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

பெரும்பாலான மையங்களில் தபால் வாக்குச்சீட்டுகளைப் பிரித்து வைக்க தனி பிளாஸ்டிக் ட்ரேக்கள் வைக்கப்படவில்லை. மேஜைகளில் அவை பாதுகாப்பு இல்லாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் தபால் வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு, யாருக்கு வாக்குப் பதிவானது என்பதை அதற்கான ஆவணங்களில் குறிப்பிடாமல், ஒரு நோட்டில் குறிப்பிட்டனர்.

சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றம் . அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எண்ணிக்கையில் முகவர்கள் வந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும் வாக்குகள் எண்ணி முடித்தும் தேவையில்லாமல் தாமதப்படுத்துகிறார்கள் என்று புகார் எழுந்தது. திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில தேர்தல் ஆணையருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து தனது புகார் மனுவை அளித்தார். கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஊராட்சி மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 5 மணி நேரம் ஆகியும் சேலத்தில் இருந்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை.என்றார்.உயர்நீதிமன்றத்திலும் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது  

பெரும்பகுதிகளில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றியை சொல்வதற்கு கூட தேர்தல் அரசு ஊழியர்கள் தாமதப்படுத்தினர்

சிலபகுதிகளில் குறைந்த வாக்குகள் வாங்கிய அதிமுக வெற்றி என அறிவித்து விட்டனர். பிறகு, கடும் வாக்குவாதத்திற்கு பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு திமுக வெற்றி என அறிவிக்கப்பட்டது  

பொதுவாக  தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு வருவாய்த் துறை மற்றும் ஆசிரியர்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுடன் வங்கிப் பணியாளர்களும் வாக்குகளை எண்ணினர்.இவர்களுக்கு முறையான பயிற்சி இல்லை தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழப்பம் வந்தால் அதில் குளிர் காயலாம் என நினைத்து செயல்பட்டது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

செவ்வேற்கொடியன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top