புத்தாண்டு பரிசாக மோடி அரசு இரவோடு இரவாக ரயில் கட்டணத்தை திடீரென உயர்த்தியது

மத்தியில் ஆளும் மோடி அரசு ரயில் டிக்கெட் கட்டணத்தை  புத்தாண்டு நள்ளிரவு முதல் திடீரென அதிகரித்து விட்டது  

கிலோ மீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி வரும் மத்திய அரசு, கடந்த 2014-15 நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன், பயணிகள் வசதி மேம்படுத்துதல் போன்ற காரணங்களை காட்டி பயணிகள் கட்டணத்தை உயர்த்தியது. 

 இருப்பினும், ரயில்வேக்கு வரவை விட செலவுதான் அதிகமாக உள்ளது என மத்திய கணக்கு தணிக்கை குழு சுட்டிக்காட்டியிருந்தது. இதையடுத்து,  ரயில் கட்டணங்களை உயர்த்த பிரதமர் அலுவலகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. புதிய கட்டணம் நேற்று அறிவிக்கப்பட்டது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி,  புறநகர் ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இல்லை. புறநகர் ரயில்களில் சீசன் டிக்கெட் கட்டணங்கள் மாற்றமில்லை.

சாதாரண  ஏசி அல்லாத ரயில்களில் 2ம் வகுப்பு உட்காரும் வசதி, 2ம் வகுப்பு தூங்கும்  வசதி, சாதாரண முதல் வகுப்பு டிக்கெட்கள் கிலோ மீட்டருக்கு 1 காசு  உயர்த்தப்படுகிறது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்  ரயில்களில் 2ம் வகுப்பு உட்காரும் வசதி, 2ம் வகுப்பு தூங்கும் வசதி, முதல்  வகுப்பு டிக்கெட்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. ஏசி சேர் கார் (உட்காரும் வசதி), ஏசி 3ம் வகுப்பு,  ஏசி 2ம் வகுப்பு, ஏசி முதல் வகுப்பு, எக்ஸ்சிகியூடிவ் வகுப்பு  டிக்கெட்களுக்கு கிலோ மீட்டருக்கு 4 காசு உயர்த்தப்படுகிறது.

புதிய கட்டண  உயர்வு இன்று முதல் (நேற்று நள்ளிரவில் இருந்து) அமலுக்கு வந்துள்ளது. மோடி அரசின்  புத்தாண்டு பரிசாக இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகள் மத்தியில் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top