உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளரான செந்தில் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார்.தொடரப்பட்ட அவ்வழக்கை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் இதுவரை நகர்ப்புற, ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாகவே நடத்தப்பட்டது. ஆனால் தற்போது 27 மாவட்டங்களில், அதிலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மற்ற 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கும், மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.

எனவே நகர்ப்புறங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரகப் பகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சிவஞான சம்பந்தம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன், தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

ஊரகப் பகுதிகள், நகர்ப்புறம் என 2 கட்டங்களாக தேர்தல் முடிவுகளை வெளியிட சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top