சென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி!

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் துணையோடு பிரமாண்ட பேரணி நடந்தது.அதில்  650 அடி நீள தேசிய கொடியை ஊர்வலமாக ஏந்திச் சென்றனர்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.


இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை வாபஸ் பெற கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத் தக்கூடாது என வலியுறுத்தியும் சென்னையில் 28-ந் தேதி (நேற்று) கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

இதனால், சென்னை ஆலந்தூர் பகுதியில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. ஆலந்தூர் சிமெண்டு சாலையில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் காலை 11 மணிக்கு பேரணி தொடங்கியது. எம்.கே.என்.சாலை வழியாக சென்ற பேரணி சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை அருகே முடிந்தது. மதியம் 1 மணி அளவில் அந்த இடத்தை பேரணி அடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த பிரமாண்ட பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்,மற்றும் பொதுமக்கள்  என ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர்.

அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதை வாபஸ் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள், 650 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை பிடித்தபடி சென்றனர். கைகளிலும் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.பேரணி மிக அமைதியாக போக்குவரத்துக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நடந்தது


பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி நிருபர்களிடம் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என்றும், இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை தமிழகத்தில் ஒருகாலமும் அனுமதிக்க விடமாட்டோம். ஆவணங்கள் தொடர்பாக கணக்கெடுக்க வந்தால் அதிகாரிகளை வீதிகளில் விடமாட்டோம். இந்தியாவில் பல மாநில முதல்-மந்திரிகள் அறிவித்தது போல் தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-அமைச்சர் அறிவிக்கவேண்டும். மக்கள் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பு அளிக்கவில்லை என்றால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top