அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும் என கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல – ப.சிதம்பரம்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் எனக்கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல என தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் வரும்  31-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடைபெற்றது பற்றி ராவத் சமீபத்தில் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராவத், தலைமைத்துவம் என்பது முன்னணியில் நின்று வழிநடத்துவது. தலைமை வகிப்பதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், நீங்கள் முன்னின்று செல்லும் போது, அனைவரும் உங்களை பின்தொடர்வார்கள். இது சாதாரண விஷயம் அல்ல.

மிகவும் எளிமையான விஷயம் போல இது தோன்றும். ஆனால், இது மிகவும் சிக்கலான சூழலாகும். கூட்டத்திற்குள் கூட உங்களால் தலைவர்களை கண்டறிய முடியும். உங்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்பவர்களே தலைவர்கள். தேவையற்ற வழியில் நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல.  வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைத்துவம் இல்லை என்றார்.

அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் எனக்கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல என தெரிவித்தார்.

இதுதொடர்பாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ப.சிதம்பரம் இன்று பேசியதாவது:

அரசை ஆதரிக்கும் வகையில் பேசும்படி டி.ஜி.பி. மற்றும் ராணுவ தளபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்பது ஓர் அவமானம்.

ராணுவ தளபதி ராவத்திடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன்.  நீங்கள் ராணுவ தலைமை தளபதியாக இருக்கிறீர்கள்.  உங்களது வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்.

அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர்கள் செய்திடுவார்கள். நீங்கள் எப்படி போரிட வேண்டும் என்று கூறுவது எங்கள் வேலையல்ல என்பதுபோல், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு கூறுவது ராணுவத்தினரின் பணியல்ல.  நீங்கள் உங்களது யோசனையின்படி போரிடுங்கள். நாட்டின் அரசியலை நாங்கள் கவனித்து கொள்வோம் எனக்கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top