இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தடுக்க இந்திய பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து அதிபராகப் பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, ”இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் போதும், அரசு நிகழ்ச்சிகளிலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும்” என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 1949-ம் ஆண்டுக்குப் பிறகு 67 ஆண்டுகள் கழித்து இலங்கையின் 68-வது சுதந்திர தின விழா 04.02.2016 அன்று நடைபெற்றபோது சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 18 அன்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிர்வாக ரீதியாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றம் செய்து வருகின்றார். இலங்கையின் 72-வது சுதந்திர தினம் எதிர்வரும் 04.02.2020 அன்று கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சயில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடு­வ­தற்கு கோத்தபய அர­சு தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச.27) தன் முகநூல் பக்கத்தில், “இலங்கையின் சுதந்திர தினத்தன்று, சிங்கள மொழியில் மட்டுமே தேசீய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது.

இலங்கை அரசின் இத்தகைய பேரினவாதப் போக்கு, இலங்கையில் தமிழர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழி வகுக்கும்.

எனவே, இந்திய பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார். .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top