பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல்: போலீஸ் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

மாணவி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் புகார் பற்றி போலீஸ் அதிகாரிகள் 7-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டார்.


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.


இந்த நிலையில் உரிமை மீறல் புகார் மனுக்கள் தொடர்பான விசாரணை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது. மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணையை நடத்தினார்.

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கடந்த 3-9-2018 அன்று அப்போதைய மாநில பா.ஜனதா தலைவரும், தற்போதைய தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவருடன் விமானத்தில் வந்த கல்லூரி மாணவி சோபியா, பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக அவரை போலீசார் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மனித உரிமை மீறல் நடந்தது என சோபியாவின் தந்தை சாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சோபியா தனது தந்தை சாமியுடன் வந்து ஆஜரானார். சோபியாவின் தாயும் உடன் வந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் ஆகியோர் ஆஜராகினர். ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் வாய்தா வழங்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் வருகிற 7-ந்தேதி சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top