கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் கண்ணனூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாள் – சிறப்பு கட்டுரை

வ.உ.சி. சிறைப்படலம்.

107 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வ.உ.சி. கேரளா கண்ணணூர் சிறையிலிருந்து கடுமையான சிறைவாசத்திற்குப் பிறகு சுதந்திரப் பறவையாக வெளிவந்த நாள் இன்று.

1908 மார்ச் 12 ம் தேதி வ.உ.சி.யை பிரிட்டீஷ் அரசு கைது செய்தது. அந்நாளில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முழுமையும் மக்கள் திரளாக கூடி முழங்கினர். ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. பாளையங்கோட்டை சிறையிலிருந்து இரயிலில் கொண்டு சென்ற போது திருநெல்வேலி, மணியாச்சி,மதுரை, திருச்சி போன்ற நகர்களில் கூடி வ.உ.சி.யை ஆர்ப்பரிப்புடன் அனுப்பினர்  தமிழ் மக்கள்.ஆனால்,  சிறையிலிருந்து வெளியே வந்த போது வ.உ.சி.யை வரவேற்க யாருமே வரவில்லை. ஏன்? என்ன காரணம். யாருமே வரவேற்க வரவில்லையே என்று எண்ணிய வ.உ.சி.யின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்.

வ.உ.சி. தனது சுயசரிதையில் கீழ்கண்டவாறு கூறுகிறார்

“ஆயிரத் துத்தொள் ளாயிரத் துப்பன்

ன்னிரண்டாம் வருஷம் டிஸம்பர் மாதம்

ஒருநன் மாலையென் உடம்பில் எண்ணெய்

சிறிது தடவி முழுக நிற்கையில்

ஒருவன் வந்தெனை ஜெயிலர் விளிப்பதா

அழைத்தான். சிரையுடை அணிந்துடன் சென்றேன்.

“விடுதலை ஆர்டர் அடுத்தது. நீவிர்

வீடுறலாமென” விளம்பினன் ஜெயிலர்.

வ.உ.சி.யை பிரிட்டீசு அரசாங்கம் விடுதலை செய்த போது உள்ளூர மிகவும் அச்சமுடன் இருந்துள்ளது என்பதை அவர்கள் எடுத்த நடவடிக்கை மூலம் பட்டவர்த்தனமாக தெரியவருகிறது.

சிறையிலிருந்து வெளியிட சில மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மிகவும் இரகசியமாக கையாண்டது. 24.12.1912 வ.உ.சி. விடுதலை அடைந்து அவர் போய் சேருமிடம் உடனே தந்தி மூலம் தெரிவிக்கப் பட வேண்டும் என்று ரகசிய ஆணை பிறப்பித்து இருந்தது  

அவர் எந்த,எந்த  மாவட்டத்திற்கும் செல்வதாயிருந்தாலும்  இரயில் நிற்கும் எல்லா முக்கியமான நிலையங்களுக்கும் ஆட்களை அனுப்பி அவரை பார்க்க வருபவர்கள் பெயர்களை குறித்துக் கொள்ள வேண்டும் என்றும்,  வ.உ.சி. இந்த மாவட்டத்திற்கு வந்தவுடன் அவரை பார்க்க வருபவரை கண்காணிக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டரையும், ஒரு தலைமைக் கான்ஸ்டெபிளையும் அனுப்புவதாகவும், அவரோடு சம்பந்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்று பதிவு செய்யப்படுவார்கள் என்றும், அரச நிந்தனைக் குற்றங்களில் ஈடுபட்டால் அவரை நாடு கடத்த மனு செய்யப்படும் என்று எச்சரித்தும் இருந்தது.  இதன் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் எவ்வளவு அச்சம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது.

இந்த உத்தரவு ஸ்டூவர்ட் என்ற ஆங்கிலேயரால் இந்த ரகசிய அறிக்கை சம்பந்தப்பட்ட எல்லா காவல் நிலையங்களிலும், பொது நாட் குறிப்பேட்டிலும் மற்றும் இரயில்வே நிலையத்திலும் பதிவு செய்யப்பட உத்தரவிடப் பட்டிருந்தது .

சிறையிலே இருந்து விடுதலையான சிதம்பரம் பிள்ளையை வரவேற்றிட யாருமே சிறை வாயிலுக்கு வரவில்லை. தமிழ்நாடு அவரது தியாகத்தை நன்றி கெட்டத்தனமாக அப்போது மறந்துவிட்டது என்பதை விட அங்கிலேயருடைய  கடுமையான நடவடிக்கை காரணமாகத்தான் யாவரும் வருவதற்கு அஞ்சினர் .

சிறையிலே இருந்து வெளிவந்த சிதம்பரனாரை சிறை வாயிலே வரவேற்றவர்கள்  சுப்பிரமணிய சிவாவும், கண்ணனூர் கணபதி பிள்ளை மட்டும்தான்.

நாலரை வருடங்கள் சிறையிலே பல கொடுமைகளைக் கடுமையாக அனுபவித்தவர் வ.உ.சி. அதுமட்டுமல்ல, வழக்குரைஞராகப் பணியாற்றி வானளாவும் பெரும் புகழைப் பொது மக்களிடம் பெற்று வளமாக வாழ்ந்த பெருமகன் சிதம்பரனார்.

தன்னந்தனி மனிதனாக அரும்பாடுபட்டு உழைத்துப் பல கஷ்டங்களை ஏற்று, வெள்ளையர்கள் தமிழர்களைக் கொள்ளையடித்த பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்துக் கப்பலோட்டிய முதல் தமிழ் மகன் சிதம்பரனார்.

வடநாட்டுப் பத்திரிக்கைகளும், தென்னாட்டுப் பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து சிதம்பரனார் பெற்ற 40 வருட தீவாந்தரத் தண்டனையை எதிர்த்து எழுதிடும் அளவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர் சிதம்பரனார்.

அப்படிப்பட்ட செயற்கரிய செயல்கள் செய்து சிறையில் செக்கிழுத்த செம்மலை சிறைவாயிலிலே வரவேற்றிட காங்கிரஸ் மகா சபை மக்களுள் ஒருவரும் வராததால், அரசியலும் பொதுவாழ்வும் அப்போது மகா பெரிய நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டன என்பது தான் சிதம்பரனார் வரலாறாகக் காட்சியளிக்கிறது

ஆனால், ஒரே ஒருவர், அவரும் சிதம்பரனாருடன் பெற்ற கடுந்தண்டனையை முன்கூட்டியே அனுபவித்து விட்டு, விடுதலையாகி வெளியே வந்திருந்த காரணத்தினால், நட்பினருமை தெரிந்த நன்றியுணர்ச்சியின் துடிதுடிப்பால், சிறையிலே அனுபவித்த கொடுமைகளின் காரணமாக குஷ்ட நோய் ஏற்பட்டு, அந்த நோய் உடலெல்லாம் பரவி, கால், கை விரல்கள் எல்லாம் மடிந்து வீங்கி வழியும் புண்களின் சீழ் ரத்தக் கோரமையோடு, ஊன்று கோல் ஒன்றை ஊன்றிக் கொண்டு சிறைவாயில் முன்னே சிதம்பரனாரை வரவேற்றிட வந்திருந்தார் பாவம்! அந்தக் குஷ்ட நோய் பெருமகனைக் கண்ட தியாக மூர்த்தி சிதம்பரம் பிள்ளை, கண்ணீர் விட்டுக் கதறி, குஷ்டநோயாளர் என்றும் பாராமல் அவரைக் கட்டித் தழுவி “அப்பா சுப்பிரமணிய சிவா, நீயாவது வந்தாயே!” என்று ஆரத் தழுவிக் கொண்டே கண்ணீர் சிந்தினார்.

சிதம்பரனார் வாழ்க்கையிலே அவர் அடைந்த துன்பங்களைக் கண்டு மனமுருகி வருந்தி வேதனைப்பட்டவர்கள் தமிழ் நாட்டிலே இரண்டே இரண்டு தியாக உள்ளங்கள்தான். ஒருவர் சுப்பிரமணிய சிவா. மற்றவர். கவியரசர் பாரதிப் பெருமகன் ஆவார். சிறை மீண்ட சிதம்பரனார் சென்னை மாநகரிலேயே சில ஆண்டுகளைக் கழித்தார்.

ராஜத்துரோகம் என்ற பெயரில் சிதம்பரனார் தண்டனை பெற்றவர் என்பதால், அவரது வழக்குரைஞர் சின்னமான ‘வக்கீல் சன்னத்து’ உரிமையை வெள்ளையராட்சி பறிமுதல் செய்துவிட்டது. அதனால் என்ன செய்வது என்று அறியாது திகைத்தார். தொழிலும் அவரால் நடத்த முடியவில்லை.

மனதளவில் சிங்கம் போன்று உறுதி இருந்தாலும் உடலளவில் சிறை வாழ்க்கை அவரை புரட்டித்தான் போட்டது. சிறையில் இருந்த காலத்தில் பெருமளவில் உதவி செய்த பெரிய புராண பதிப்பாசிரியர் கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியாருக்கு தனது நன்றியைத் தெரிவிக்க கோவை சென்றார். அப்படியே சில காலம் கோவை பேரூர் அருகே சில காலம் தங்கி வீட்டுக் கடனை அடைக்க எண்ணி சில வேலைகள் செய்தார்.

கோவையில் விடை பெற்று வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகர் நோக்கி குடும்பத்துடன் வருகை புரிந்தார். பட்ட காலிலே படும் என்பது போல வ.உ.சி.யை வறுமை விடாது தொடர்ந்தது. இக்காலங்களில் முழுமையாக தமிழ்த் தொண்டு புரிய ஆரம்பித்தார்.

பரலி சு. நெல்லையப்பர் கூறியது போல வ.உ.சி.யை தீண்டதகாத தலைவராகவே பார்ப்பதை தவிர்த்து வந்தனர் மற்ற தலைவர்கள்..எந்த தலைவர்களும் இவரை பார்க்க வரவில்லை. தனது நண்பர்களைக் காண புதுச்சேரி சென்றார்.பாரதி வீட்டை கண்டடைந்து பாரதியையும், மனைவி மக்களையும் கண்டு களித்தார்.

அரவிந்தரை கண்டு பழைய மாதிரியே இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கிறதோ அத்தனை மொழிகளிலும் பத்திரிக்கை கொண்டு வரும் திட்டத்தை முன்மொழிந்தார். பாரதி மிகவும் நகைத்து விட்டார். பலப் பல புது யோசனைகள் கூறிக் கொண்டிருந்தார் வ.உ.சி.

இந்திய முன்னேற்றம் மாத்திரம் அல்ல உலக முன்னேற்றத்திற்ககும் கூட பாடுபடப் போவதாக அரவிந்தரிடம் கூறினார். அவருடைய உற்சாகம் வெளிக்குச் சிறிதும் குன்றியதாக காணப்படவில்லை என்றாலும் உள்ளூர தாம் தோற்றுவிட்டோம்  என்ற தீராத மனப்புழுக்கத்துடன் தீராத வேதனையில் காணப்பட்டார்.தாம் தோற்றுவித்த சுதேசி நாவாய் கம்பெனி அழிந்து விட்டதே மேலும் எதிரியிடமே கப்பலை விற்றுவிட்டார்களே என்ற மனக்குறை அவரை வாட்டி வதைத்தது.

சென்னை பெரம்பூரில் வசித்த காலத்தில் 1917-18 வாக்கில் பஞ்சம் வந்த போது பிரிட்டீஷ் சர்க்கார் தினமும் 5000 நபர்களுக்கு ரூபாய்க்கு நான்கு படி அரிசி நியாய விலைக் கடை மூலம் அளித்தது.

அச் சமயம் பெரியாருடைய ஆத்ம நண்பர் தண்டபாணி பிள்ளை தனது பங்களா வீட்டை அரிசி கடையாக மாற்றி வ.உ.சி.க்கு அரிசிக் கடையில் வேலையும் அளித்தவர். அவருக்கான வேலை அரிசியை கொண்டு வரவும், விற்பனை செய்து தருவதுமான வேலை. இதனை பிரீட்டீஷ் அரசாங்கத்திற்கு தெரிய வந்து வ.உ.சி.க்கு வேலை அளிக்கப்பட்ட காரணத்துக்காக அரிசிகடை உரிமத்தை ரத்து செய்து மூடிவிட்டார்கள். இதனால் 5000 நபர்களுக்கு தினமும் அளிக்கப் பட்ட அரிசி பெறமுடியாமல் அல்லாடும் நிலைமைக்கு அப்பகுதி மக்களைத் தள்ளி விட்டார்கள்.வ.உ.சி ஒருவருக்காக பிரீட்டீஷ் அரசாங்கம் 5000 நபர்களை பழிவாங்கியது

நாட்டுக் கடனுக்காக  கப்பலை விட்டது ஒரு காலம். வீட்டுக் கடனை அடைக்க அரிசிக்கடை தவிர்த்து மண்ணெணெய் கடை, நெய் கடை போன்று பல வியாபாரங்களில் ஈடுபட்டார். எந்த வியாபாரமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சோபிக்கவில்லை.

சென்னை வாழ்வில் அவரைக் காப்பாற்றியது தனது அரசியல் குருநாதர் மாதந்தோறும் திலகர் அளித்த சுயராஜ்ய நிதியும், தென்னாப்பிரிக்கா தமிழர்களின் தொடர்ந்து ஆதரவு அளித்த தயவும் மட்டுமே அவரால் வாழ்க்கையை ஓட்ட முடிந்தது.

தமக்கு வக்கீல் தொழில்தான் தெரியுமே என்பதனால் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவராக செயல்பட்ட சீனிவாச அய்யங்காரை சந்தித்து  தங்களது வழக்குத் தொழிலுக்கு நான் தங்களுக்கு உதவியாக இருந்து சட்ட நுணுக்கங்களை தயாரித்து எழுதி தருவதாகவும், அதற்கென மாதம் ஒரு தொகை எனக்கு தந்தால் வாழ்க்கையை ஓட்ட உதவியாக இருக்கும் என வேலை கேட்டார். அய்யங்கார் வீட்டிற்குள் சென்று ஒரு கவரில் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு, வந்து வ.உ.சியிடம் கொடுத்தார். நான் வேலை தான் கேட்டு வந்தேன்.யாசகம் கேட்டு வரவில்லை.  வேலை செய்து சம்பாதித்து வாழவே விரும்புகிறேன் என்று கூறி விட்டு அவர் கொடுத்த பணத்தை வாங்காமல் சுயமரியாதையுடன் திரும்பி வந்து விட்டார்.

வெள்ளையர் அரசாங்கம் கோர்ட்டில் சென்று வழக்காடும் உரிமையை பறித்து விட்டது.மீண்டும் வழக்காடு மன்றத்தில் வழக்குரைஞர் சன்னத்தை உரிமையை புதுப்பிக்க முயற்சி செய்தார். அப்போதைய தலைமை நீதிபதி அப்துல் ரகீம் என்பவரிடம் வ.உ.சி., தண்டபாணி பிள்ளை, சங்கரன் நாயர் ஆகியோர் சேர்ந்து மனு செய்து முறையிட்டார்கள்.

அப்போதைய பெரும் வக்கீலாக இருந்து வந்த  இராஜாஜி இது நடவாது என்று கூறி தலையிட மறுத்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து சங்கரன் நாயரும் பின்வாங்கி விட்டார்.

இந்த விசயத்தில் அஞ்சாநெஞ்சன் அப்துல் ரகீம் துணிச்சலோடு வ.உ.சி.யை வழக்கறிஞர் வேலைக்கு பரிந்துரை செய்து விட்டு பிரச்னை வரும் என்று எண்ணி அப்துல் ரகீம் மரியாதையாக வங்காளத்துக்கு பணி மாறுதல் செய்து கொண்டு போய்விட்டார். இதனை தொடர்ந்து வாலஸ் என்பவரின் உதவியோடு மீண்டும் வ.உ.சி.க்கு வாதாட வழக்கறிஞர் சன்னத் கிடைத்தது. மீண்டும் கோவை, கோவில்பட்டி, தூத்துக்குடி என வறுமையின் கோரப்பிடியோடு வாழ்க்கையை நடத்தி பழகிக் கொண்டார்.

வ.உ.சி.யின் தன்னலமற்ற பெருந்தியாகம் இறுதியில் வ.உ.சி யாரென்று கூட தெரியாத நடிப்பு சுதேசிகளிடம் தோற்றுத்தான் போய்விட்ட நிலைமையானது.

”வந்த கவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று – சத்த மில் வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்

நாச் சொல்லும் தோலும் மெலிந்து”

என்று நொந்து போய் தன் வறுமை நிலையைத் தானே இரங்கி எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டார். செய்நன்றி அறிதலுக்கு உதாரணமாக வாழ்ந்த வ.உ.சிக்கு காட்டி ய பிரதிபலன் அவருக்கு உரித்த மரியாதையை அவர் வறுமையில் உழன்ற காலத்திலும் காட்டவில்லை.  பத்திரிக்கைகளில் கூட அவரது இறப்பு நிகழ்வை போடத் தயங்கி நன்றியை மறந்து விட்டோம்.

ரெங்கையா முருகன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top