காலிமனைகள் மீது வரி விதிப்பு சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட காலிமனைகள் மீது உரிய சட்ட விதிகளின்படி வரி விதிப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919-ன் படி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் மீது வரி விதிக்கப்பட வேண்டும்.


மாநகராட்சி மன்றத்தீர்மானம் எண். 405/2009, 2009-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதியின்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் மீது, வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டு வரித்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

காலிமனைகள் மீதான வரி விதிப்புகள் அனைத்தும் நடைமுறையில் காலிமனை உரிமையாளர் அளிக்கப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையிலும், மாநகராட்சியின் கள அலுவலர்களால் கள ஆய்வு மூலம் கண்டறிந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் ஒரு சில பகுதிகளில் உள்ள காலிமனைகள் வரி விதிப்பிற்குட்படுத்தப்படாமல் உள்ளது என தெரியவந்துள்ளது. எனவே, மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் மன்றத்தீர்மானத்தின் படி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் அனைத்தும் வரி விதிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

உரிமையாளர்கள் தங்களது காலிமனை மீது வரி விதிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், உரிமை கோரும் ஆவணங்களை உடனடியாக மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து, காலிமனை மீது வரி விதிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

வரி விதிப்பிற்கு உட்படாத காலிமனைகள் மீது உரிய சட்ட விதிகளின்படி வரி விதிப்புகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top