எது தேசவிரோதக் காட்சி? ஊடகங்களுக்கு மத்திய அரசு கடிதம்; தேசவிரோத காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்!

எது தேசவிரோதக் காட்சி?

தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி ஊடகங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் எது தேச விரோத காட்சிகள் என தெளிவு படுத்தவில்லை

பாராளுமன்றத்தில் தனக்கு இருக்கும் மிருகபலத்தால் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி நாட்டு மக்களுக்கும் இந்த ஜனநாயக அமைப்புக்கு பெரும் கவலையை –அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது பாஜக ஆட்சி

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.முதலில் அசாம் மாநிலத்தில் ஆரம்பித்து கிட்டதிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்கள் தன்னிச்சையாக போராடத் துவங்கி இருக்கிறார்கள்

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியும் மாணவிகளை பலவந்தப்படுத்தியும் அத்துமீறல் நடத்தினார்கள். இதை ஊடகங்கள் வெளியிட்டு இந்த ஆட்சியின் கோர முகத்தை மக்களுக்கு வெளிபடுத்தியது இது தேச விரோதக் காட்சியா ?

ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தடியடி நடத்தியதை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட வந்த மாணவர்களின் இருசக்கர வாகங்களை காவல்துறை அடித்து நொறுக்கியது.இதை ஊடகங்கள் படம் பிடித்ததால் பத்திரிக்கையாளர்களை காவல்துறை சிறை பிடித்து வைத்தது.இதை ஊடகங்கள் வெளிப்படுத்தியது தேசத் துரோகக் காட்சியா ?

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளும் வீசி, சில பஸ்களுக்கு தீயும் வைத்தனர் இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களை அடித்து மிரட்டி அங்கிருந்து விரட்டி விட்டனர்.இது எல்லா ஊடகங்களிலும் வந்தது  இதை மத்தியில் ஆளும் பாஜக தேசத் துரோக காட்சி என்கிறது!

காவல்துறையினரோடு ஆர்.எஸ்.எஸ் காரர்களும் இந்துத்துவ தொண்டர்களும் கூட்டுச்சேர்ந்து மாணவர்களை தாக்கும் காட்சி பத்திரிக்கையில் வந்தது. இவை எல்லாம் ஆளும் பாஜக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது ஆகையால் பாஜகவிற்கு பின்னடைவு தரும் காட்சிகள் எல்லாம் தேசத் துரோக காட்சியாக கருதி அதை மக்களிடம் கொண்டு செல்லாவண்ணம் புதிய அறிக்கை தயாராகி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது  

‘வன்முறையை தூண்டும் விதமான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி சேனல்களுக்கு கடந்த 11-ம் தேதி மத்திய அரசு சார்பில் அறிவிக்கைகள் அனுப்பப்பப்பட்டன.

.தற்போது,  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் செய்தி ஊடகங்களுக்கு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசவிரோத நடவடிக்கைகளையும், வன்முறைகளையும் ஊக்குவிக்கும்விதமான காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகியிருக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிரானதாகவோ, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ அமைந்திருக்கும் காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறு செய்கிறவர்களை தோலுரித்து காட்டி மக்களுக்கு இவர் யார் என்று புரிய வைக்கத்தானே ஊடகங்கள் இருக்கின்றன.அதை தன்னுடைய பாராளுமன்ற மிருகப் பலத்தை-அதிகாரத்தைக் கொண்டு தேச விரோதக் காட்சியாக சித்தரிப்பது அயோக்கியத் தனம். ஊடகங்கள் இதை புரிந்து கொண்டு மக்களுக்கான ஊடகங்களாக இனியாவது செயல்பட்டால் நல்லது

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top