குடியுரிமை சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது! ஸ்டாலின் ஆவேச உரை

அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே ஒரே நாடு என்ற கனவை நிறைவேற்ற முடியும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்களையும் புறக்கணித்துவிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்களித்துள்ளனர். இவர்கள் தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளனர். இது குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?

மாற்றம், முன்னேற்றம் என்று கூறிக் கொண்டு இருந்தவர் இந்த சட்டத் திருத்தத்துக்கு வாக்களிப்பது தொடர்பாக இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை, உரிய திருத்தங்கள் செய்த பிறகே வாக்களிப்போம் என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் மாநிலங்களவைக்கு சென்று அங்கு எதைப்பற்றியும் பேசாமல் வாக்களித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக கேரளம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் முதல்வர்களே போராட்டத்தை நடத்தியுள்ளனர். புதுச்சேரி முதல்வர் கூட தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஆனால் தமிழக அரசு இதனை எதிர்க்க திராணியற்ற அரசாக உள்ளது.

இதுபோன்று மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரும்போது திமுக அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. சிறைக்கு அஞ்சும் இயக்கம் திமுக கிடையாது.

அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே ஒரே நாடு என்ற கனவை நிறைவேற்ற முடியும். அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் இதனை நிறைவேற்ற முடியாது என்பதை பாஜக உணர வேண்டும்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்ளையும் புறக்கணிக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top