குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு: டெல்லியில் போலீஸ் தடியடியை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியும் மாணவிகளை பலவந்தப்படுத்தியும் அத்துமீறல் நடத்தினார்கள்

ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு தடியடி நடத்தியதை கண்டித்து, நாடு முழுவதும் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளும் வீசி சில பஸ்களுக்கு தீயும் வைத்தனர் இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களை அடித்து மிரட்டி அங்கிருந்து விரட்டி விட்டனர்

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி போலீசார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தும் தடியடி நடத்தினர்.
இதில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

போலீசாரின் இந்த அத்துமீறல்களை கண்டித்தும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும் நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். மாணவிகளும் இதில் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்து போராட்டத்துக்கு ஆதரவாக குவிந்தனர். கடும் குளிரிலும் பல மாணவர்கள் சட்டை அணியாமல் கோஷம் எழுப்பினார்கள்.


மாணவர்கள் சிலர் கூறும்போது, “நாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்தான் இருந்தோம். பல்கலைக்கழகத்தின் முன்வாசல் மற்றும் பின்வாசல் வழியாக போலீசார் உள்ளே நுழைந்தனர். நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறியும் போலீசார் அதை கேட்கவில்லை. மாணவிகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை” என்றனர். ஒரு மாணவி தனது காயத்தை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

போலீசார் ஏற்கனவே கைது செய்த 50 மாணவர்கள் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் பல்கலைக் கழகத்தில் நேற்று பதற்ற நிலையே காணப்பட்டது. ஜனவரி 5-ந் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுதிகளை காலி செய்யும்படியும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில், முதலில் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்துகொண்டனர்.

டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாட்வாதுல் உலாமா கல்லூரியிலும் போலீசாரை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்த முயன்றபோது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை வெளியே அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் வளாகத்துக்குள் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள்

ஐதராபாத் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மும்பை டாடா சமூக அறிவியல் கல்லூரி உள்பட நாடு முழுவதும் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், டெல்லியில் நடந்த போலீசார் தடியடியை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வழக்கமாக போராட்டங்களை தவிர்த்துவரும் ஐ.ஐ.டி. மாணவர்கள் போலீசாரின் அத்துமீறலை கண்டித்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள், வளாகத்துக்குள் உள்ள கஜேந்திரா சர்க்கிளில் கூடி போராடியதாக தெரிவித்துள்ளனர். அதேபோல கான்பூர் ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top