குடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமானது, அந்த சட்டம் இயற்றப்பட்டது கவலையளிக்கும் விதமாக இருக்கிறது என்று அமெரிக்காவும், ஐ.நா.மனித உரிமைக் குழுவும் கவலை தெரிவித்துள்ளன.

வரும் 18-ம் தேதி வாஷிங்டன் நகரில் 2+2 என்ற பெயரில் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் நிலையில் அமெரிக்கா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.


குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையிலும், மாநிலங்களவையும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாக அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் கடுமையாகப் போராடி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.


போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அசாம், திரிபுரா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் இணைப்பை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது

இந்நிலையில், வரும் 18-ம் தேதி வாஷிங்டன் நகரில் நடக்கும் 2+2 அமைச்சர்கள் அளவில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோரும் சந்தித்து பேசுகின்றனர்.

இந்த பேச்சு நடக்கும் முன் அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திரத்தான அமைப்பின் தூதர் சாம் பிரவுன்பேக், இந்தியாவில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ” இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் அரசியலமைப்புச் சட்டம். மற்றொரு ஜனநாயக நாடான அமெரிக்கா, இந்தியாவின் ஜனநாயக விஷயங்களை, மரபுகளை மதிக்கிறது. ஆனால், சமீபத்தில் இந்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தினால் உருவாகும் தாக்கங்கள் எங்களுக்குக் கவலையளிக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்


இது தவிர ஜெனிவாவில் இருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு குடியுரிமைச் சட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில் ” இந்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமைச் சட்டம் அடிப்படை இயல்பிலேயே பாரபட்சமாக இருப்பதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்த குடியுரிமைச் சட்டம் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளுக்கு இணங்கும் வகையில் இருக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றம் கவனமாகப் பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் ” எனத் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top