தமிழ் வளர்ச்சித்துறையா? இந்தி வளர்ச்சித்துறையா? மொழியுணர்வோடு விளையாடாதீர்கள்! மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பது  எடப்பாடி அரசின் தமிழினத் துரோகமே!~தமிழ் வளர்ச்சித்துறையா? இந்தி வளர்ச்சித்துறையா? என மே பதினேழு இயக்கம் தமிழக அரசின் நடவடிக்கையை எச்சரித்து இருக்கிறது

தமிழ்மொழியை செழுமைப்படுத்தவும், தமிழ் மொழியில் புதிய புதிய படைப்புகளை கொண்டு வரவும், தமிழ்மொழி ஆராய்ச்சிக்காகவும் 1968இல் சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டது தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனம். இப்படி தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் திட்டமிட்டு இந்தி மொழியை கற்பிக்கும் நடவடிக்கையை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராசன் தொடங்கி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழரின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் கீழடியை ’பாரத பண்பாடு’ என்று திரித்து சொன்ன அமைச்சர்.இப்போது தமிழ்மொழிக்காக நிறுவப்பட்ட நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருட இந்திமொழி பயிற்சியை தொடங்குவது அமைச்சரின் நடவடிக்கையை சந்தேகிக்க வைக்கிறது.

இந்தியா முழுமைக்கும் இந்தி மட்டுமே ஒரே மொழி என்று ஆட்சி கட்டிலில் ஏறியதிலிருந்து பிஜேபியும் அதன் தலைமையுமான ஆர்.எஸ்.எஸ் தீவிர பிரச்சாரத்தையும் அதற்கான செயல்திட்டத்தையும் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திவருகிறது. இதனை தமிழகம் தான் முன்னனியில் நின்று எதிர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியை தமிழ் வளர்ச்சித்துறையிலேயே திணிக்கும் அமைச்சரின் நடவடிக்கை பிஜேபி ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டத்தை தமிழகத்தில் நுழைக்கும் வேலையை தமிழக அரசும் அமைச்சர் மா.பா.பாண்டியராசனும் செய்வதாகவே பார்க்கப்படும்.

தமிழக அரசு தேவையில்லாமல் தமிழர்களின் மொழியுணர்வோடு விளையாடவேண்டாமென்று எச்சரிக்கின்றோம். ஆகவே இந்த வீபரீத முடிவை உடனடியாக கைவிட்டுவிட்டு தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு செயல்படவேண்டுமென்று மே பதினேழு  இயக்கம் கேட்டுக்கொள்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top