பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாத மாநிலங்கள்! அட்டவணை வெளியீடு

பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியை பயன்படுத்த மாநிலங்கள் தவறிவிட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டர், சமீபத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஈடுபட்ட லாரி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் செர்லாபள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம்  தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில்  பேசிய உறுப்பினர்கள், கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கூறினர். 

கடுமையான சட்டங்கள் வேண்டும் என மக்கள் கோருகின்றனர். ஆனால்  பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின்  நிதியைப் பயன்படுத்த மாநிலங்கள் தவறிவிட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிர்பயா என்பதற்கு பயமற்றவள் என்று பொருளாகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க எந்த மாநிலத்திலும் நிதி செலவிடப்படவில்லை என்றும், 18 மாநிலங்களில் பேரிடர் நிவாரண நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. டெல்லி மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், மற்ற எவ்வித திட்டத்திற்கும் நிர்பயா நிதி செலவிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்பயா நிதியில் மத்திய அரசு  டெல்லிக்கு ஒதுக்கியுள்ள ரூ 390.90 கோடியில்,   ரூ.19.41 கோடி மட்டுமே செலவு செய்து உள்ளது. உத்தரபிரதேசத்திலும் நிலைமை ஏமாற்றமளிக்கிறது, ஏனெனில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.119 கோடியில் ரூ.3.93 கோடி மட்டுமே  மாநில அரசு செலவிட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய ரூ.191.72 கோடியில் ரூ.13.62 கோடி மட்டுமே பெண்களின் பாதுகாப்பிற்காக கர்நாடகா  செலவு செய்து உள்ளது.

நிர்பயா நிதியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.103 கோடியில் மொத்தம் ரூ.4.19 கோடி மட்டுமே தெலுங்கானா அரசு பயன்படுத்தியுள்ளதால், தெலுங்கானா அரசும் நிர்பயா நிதியை முறையாக பயன்படுத்தத் தவறிவிட்டது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் ரூ. 6 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. 

மராட்டியம் , மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா மற்றும் டையூ டாமன் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதுவரை நிர்பயா நிதியில் இருந்து ஒரு பைசாவை கூட பயன்படுத்தவில்லை என மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதத்தை  கூட  மாநிலங்கள் பயன்படுத்தவில்லை.

மக்களவையில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி நவம்பர் 29 அன்று இந்த தகவல்களை வழங்கினார். மக்களவை எம்.பி.க்கள் மாலா ராய், டாக்டர் கலாநிதி வீராசாமி, ஏ.ராஜா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வின்சென்ட் பாலா,  ராமலிங்கம் ஆகிய உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த தகவலை  தாக்கல் செய்தார். 

எண் மாநிலங்கள்  யூனியன்பிரதேசங்கள் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி லட்சத்தில் பயன்பாட்டு சான்றிதழ்  பெறப்பட்டது லட்சத்தில்
1 ஆந்திரா 2085.00 814.0
2 அருணாசல பிரதேசம்  768.86 224.03
3 அசாம் 2072.63 305.06
4 பீகார் 2258.60 702.00
5 சத்தீஸ்கார் 1687.41 745.31
6 கோவா 776.59 221.00
7 குஜராத் 7004.31 118.50
8 அரியானா 1671.87 606.00
9 இமாச்சலபிரதேசம் 1147.37 291.54
10 ஜம்மு-காஷ்மீர் 1256.02 324.53
11 ஜார்கண்ட் 1569.81 405.33
12 கர்நாடகா 19172.09 1362.00
13 கேரளா 1971.77 472.00
14 மத்திய பிரதேசம் 4316.96 639.50
15 மராட்டியம் 14940.06 0
16 மணிப்பூர் 878.78 0
17 மேகாலயா 675.39 0
18 மிசோரம் 883.57 543.68
19 நாகலாந்து 689.55 357.84
20 ஒடிசா 2270.53 58.00
21 பஞ்சாப் 2047.08 300.00
22 ராஜஸ்தான் 3373.2 1011.00
23 சிக்கிம் 613.33 0
24 தெலுங்கானா 10351.88 419.00
25 தமிழ்நாடு             19068.36 600
26 திரிபுரா 766.59 0
27 உத்தரபிரதேசம் 11939.85 393.00
28 உத்தரகாண்ட் 953.27 679.41
29 மேற்கு வங்காளம் 7570.80 692.73
30 அந்தமான் 653.08 147.05
31 சண்டிகார் 746.02 260.83
32 தாதா நகர் காவேலி 420.00 158.00
33 டையூ டாமன் 420.00 0
34 டெல்லி 39090.12 1941.57
35 லட்சத்தீவுகள் 614.71 76.93
36 புதுச்சேரி 496.16 128.55

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top