மோசமான பொருளாதார வளர்ச்சி; மூன்றாவது காலாண்டு ஜிடிபி இன்னும் வீழ்ச்சியை சந்திக்கும் ப.சிதம்பரம் ட்விட்!

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியான  ஜிடிபி 2-வது காலாண்டில் ஏற்கெனவே கணிக்கப்பட்டது போலவே 4.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது, வரும் 3-வது காலாண்டில் இன்னும் மோசமாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 2-வது காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.அதில் நடப்பு நிதியாண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி-ஜிடிபி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது இருக்கிறது

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக இருந்த நிலையில் அதைக்காட்டிலும் மோசமாக 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி கண்டுள்ளது

கடந்த 2018-19-ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் ஜிடிபி 7 சதவீதமாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் 7 சதவீதமாக ஜிடிபி இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடந்துள்ளது. ஏறக்குறைய பாதி வளர்ச்சியைக் காணவில்லை. கடந்த 2012-13-ம் ஆண்டில் மார்ச் காலாண்டில் ஜிடிபி 4.3 சதவீதமாக இருந்தது அதற்கு இணையாக தற்போது வந்துள்ளது.இந்தநிலையில் திஹார் சிறையில் இருந்தவாறே சிதம்பரம் ட்விட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைப் பகிர்ந்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ” நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டில் ஜிடிபி அனைவராலும் பரவலாகக் கணிக்கப்பட்டது போலவே 4.5 சதவீதமாக வளர்ச்சி குறைந்துவிட்டது. இன்னும் மத்திய அரசு அனைத்தும் நலமாக இருக்கிறது என்று கூறிவருகிறது

மூன்றாம் காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கப் போவதில்லை, அனைத்தும் இன்னும் மோசமாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில் ஜார்கண்ட் மாநில மக்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ” ஜார்கண்ட் மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். பாஜகவின் கொள்கைகளையும், நிர்வாக முறையையும் நிராகரித்து வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்குத்தான் முதல் வாய்ப்பாக இது அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top