கோத்தபய ராஜபக்ச பேட்டி அதிர்ச்சி அளிக்கிறது;ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

இலங்கையில் வாழும் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தலையிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், ”ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

“இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறேன்” என்று கூறிய இலங்கை அதிபர், இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு, இப்படி பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தைப் போற்றுவதாகாது.

பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

.

Top of Form


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top