சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிகம் பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் இன்னும் தேவையான அளவு மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பாமல் உள்ளன.


குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சராசரி மழை அளவு பெய்யாததால் நீர்நிலைகள் இன்னும் நிரம்பவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற 4 ஏரிகளிலும் நீர் மட்டம் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தாம்பரம் மற்றும் அதனையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.


சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.


நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் சாலைகளில் உள்ள குழிகள் தெரியாமல் வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து சென்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில இடங்களில் மழைநீர் கால்வாய் பணி நிறைவடையாமல் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை நகர் முழுவதும் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.


இதற்கிடையில் சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2-ந்தேதி வரை  பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 16 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வட கிழக்கு பருவமழை பகலில் அதிக நேரம் பெய்ய வாய்ப்பு இல்லை. இரவு நேரத்தில்தான் அதிகமாக பெய்யும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி எதுவும் உருவாகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14 இடங்களில் மிக கனமழையும் 53 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 19 செ.மீ. மழை, கடலூரில் 17 செ.மீ. மழை, நெல்லையில் 15 செ.மீ. மழை, காஞ்சிபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

லட்சத்தீவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் இன்று லட்சத்தீவு, குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கும் நாளை லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3 செ.மீ. அதிகம். சென்னையில் 60 செ.மீ. பெய்ய வேண்டிய மழை 51 செ.மீ. அளவில் மட்டும் பெய்துள்ளது. இது இயல்பை விட 9 செ.மீ. குறைவு”.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top