நடிகர் கமலஹாசன் வீடு உட்பட சட்டவிரோத கட்டிடங்கள்; மாநகராட்சி , சி.எம்.டி.ஏ. அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோத கட்டிடங்களை கட்டுவதற்கு உடந்தையாக இருந்ததாக சென்னை மாநகராட்சி கமிஷனர், சி.எம்.டி.ஏ. அதிகாரி ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட 138 பேர் பங்களாக்களையும், வேறு சில கட்டிடங்களையும் கட்டியுள்ளனர்.

இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெறவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்குகள் எல்லாம் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகின்றன.


இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கடற்கரைக்கு மிக அருகில் மிகப்பெரிய பங்களாக்களை கட்ட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அவ்வாறு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்களுக்கு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளையும் வழங்கியுள்ளனர். அதில் ஒரு பங்களா உரிமையாளர், கடல் அலைகள் பங்களாவுக்குள் வராமல் தடுக்க பெரிய அளவில் தடுப்புக்களை சட்டவிரோதமாக அமைத்துள்ளார். எனவே, அலைகளை தடுக்கும் இந்த தடுப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல தடுப்புக்களை அமைக்க மாட்டேன் என்று அந்த பங்களாவின் உரிமையாளர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அந்த பங்களாவுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏற்கனவே பல உத்தரவுகள் அரசு உயர் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டன. அந்த உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகள், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், அரசு வக்கீல்களை வாய்தா வாங்க நிர்ப்பந்திக்கின்றனர்.

அரசு உயர் அதிகாரிகள் எல்லாம் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் விட்டொழித்துவிட்டு, சட்டவிரோத கட்டிடங்களை கட்டுவதற்கு உடந்தையாகவும், உதவியாகவும் இருந்து வருகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம்.

இந்த தொகையை சென்னை மாநகராட்சி நடத்தி வரும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் சென்னை மாநகராட்சி கமிஷனர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top