கீழடி ஆய்வு குறித்து நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி; தமிழர் தொல்நாகரீகத்தை உறுதிப்படுத்தினார் மத்திய அமைச்சர்

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்கள் மாநிலங்களவையில் கீழடி ஆய்வுக்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.

வைகோ இன்று  மாநிலங்களவையில் கீழடி ஆய்வுகள் குறித்து கேள்வியெழுப்பினார். அப்போது, மதுரை அருகே, வைகை ஆற்றங்கரைச் சமவெளியில், கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தவை என்பதை  கேள்வியெழுப்பி மத்திய மந்திரி வாயிலாக மக்களவையில் உறுதிப்படுத்தினார்.

வைகோவின் கேள்விக்கு பதிலளித்த பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், “கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. ஆறு முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.

இதையடுத்து வைகோ, “கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன? அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு?,” என கேள்வியெழுப்பினார்.

அதற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் படேல், “இந்தியத் தொல் பொருள் துறை, 2014-15, 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளில் கீழடியில் மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது. அதற்காக செலவிடப்பட்ட நிதி 2014-15 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 70,010 ரூ., 2015-16 ஆம் ஆண்டில் 48 லட்சத்து 50,798 ரூ., 2016-17 ஆம் ஆண்டில் 35 லட்சத்து 50,000 ரூ., 2017-18 ஆம் ஆண்டில் 22 லட்சத்து 50,000 ரூபாய்,” என பதிலளித்தார்.

இதன்பின், “கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா?,” என வைகோ எழுப்பிய கேள்விக்கு, “இல்லை. கீழடியில், தமிழக அரசு ஒரு அருங்காட்சியகம் அமைக்கின்றது,” என பதிலளித்தார்.

தமிழரின் தொன்மையான நாகரீகத்தை தன்னகத்தே கொண்ட கீழடியை  மீண்டும் அகழாய்வு செய்யவும் ஏற்கனவே கண்டுபிடித்த பொருட்களை அரும்காட்சியகத்தில் வைக்கவும் கோரிக்கைகள் வலுத்து வந்தபோதும் செவி சாய்க்காத மத்திய பாஜக அரசு இப்போது மக்களவையில் வைகோவின் கேள்வி மூலம் அம்பலப்பட்டு நிற்கிறது.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top