பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்; மோடியை காப்பாற்றியாவரே பால் தாக்கரேதான்! சிவசேனா ஆவேசம்

பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார். அதை அவர்கள் மறந்து விட்டனர். பாஜகவினர் நன்றி கெட்டு சுற்றுகிறார்கள் என சிவசேனா பாஜகவை விமர்சித்து உள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர். அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் திடீர் என  நேற்று மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மழுப்பலான பதிலையே அளித்தார். இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இது காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் இன்னும் சிவசேனாவை நம்பவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்த நிலையில் பாஜகவை விமர்சனம் செய்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில், பாஜகவை முகலாய பேரரசர் முகம்மது கோரியுடன் ஒப்பிட்டுள்ளது. பின்னால் குத்துபவர்களுக்கு மராட்டியத்தில் தகுந்த பதில் வழங்கப்படும் என கூறி உள்ளது.

சிவசேனாவின் அந்த கட்டுரையில், பாஜகதான் தேசிய ஜனநாயக கூட்டணி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் அந்த கூட்டணியில் ஒரு அங்கம் அவ்வளவுதான். எங்களை கூட்டணியில் இருந்து நீக்குவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியை அழைத்து பாஜக ஏன் பேசவில்லை.

உங்களுக்கு சிவசேனா பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் பேச பயம். பாஜக நிதிஷ் குமார் உடனும், மெகபூபா முப்தி உடனும் சேரும் போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் அனுமதி கேட்டது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக எப்போதும் ஒரு பொருட்டாக மதித்தது கிடையாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் எல்லோரும் மோடியை எதிர்த்தனர். ஆனால் பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார். அதை அவர்கள் மறந்துவிட்டனர். பாஜகவினர் நன்றி கெட்டு சுற்றுகிறார்கள்.

நீங்கள் அரசியலுக்கு வரும் முன்பே நாங்கள் அரசியல் செய்தோம். உங்களுக்கு இந்துத்துவா என்றால் என்ன என்று தெரியும் முன்பே நாங்கள் இந்துத்துவா அரசியல் செய்தோம். உங்களின் அரசியலுக்கு நாங்கள்தான் முன்னோடி என்பதை மறக்க வேண்டாம் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top