சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்கு;சஸ்பெண்டு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த நர்சை தாக்கி,ஆபாசமாக திட்டிய  தீட்சிதரை எதிர்த்து மக்கள் இயக்கங்கள்  போராட்டம் நடத்தியதால் தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.கோர்ட் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சஸ்பெண்டு செய்யப்பட்டாரா என கேள்வி!

தமிழில் அர்ச்சனை செய்யமாட்டோம், தேவாரம் பாடமாட்டோம் நீதிமன்றமே சொன்னாலும் கேட்கமாட்டோம் என தங்களுக்கென்று ஒரு ரௌடி இராஜ்ஜியம் போல் செயல்பட்டு வருகிறார்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தீட்சிதர்கள்.

ஏற்கனவே, ஆறுமுக ஓதுவார் என்கிறவரை  கோவிலுக்குள் தேவாரம் பாடக்கூடாது என்று மிரட்டி வைத்திருந்தனர். மீறி பாடிய ஓதுவாரை தீட்சிதர்கள் அடித்து விரட்டி ரௌடித்தனம் செய்தனர்.இதை தட்டிகேட்டு மக்கள் இயக்கங்கள் போராட்டம் நடத்தி உயர்நீதிமன்றம் சென்று தேவாரம் பாட அனுமதி பெற்று தேவாரம் பாட வைத்தனர். சிறிது காலம் பாடி விட்டு பிறகு தேவாரம் பாடுவதை நிறுத்தி விட்டனர்  

தற்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை [நர்சை] தாக்கி,ஆபாசமாக திட்டிய  தீட்சிதர் தர்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி இவரது மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார்.


இவர் தனது மகன் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் கோவிலுக்கு சென்றார். தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதர் தர்‌ஷனிடம் கூறினார். ஆனால் நர்சு லதாவிடம் பெயர், ராசி எதுவும் கேட்காமல் தீட்சிதர் அர்ச்சனை செய்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீட்சிதர் தர்‌ஷன் நர்சு லதாவை ஆபாசமாக திட்டி,பெண் என்றும் பாராமல்  கன்னத்தில் அறைந்தார்.


காயம் அடைந்த லதா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சிதம்பரம் டவுன் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.

தர்சன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில் பொது தீட்சிதர்கள் அவசர கூட்டம் செயலாளர் பாலகணேசன் தீட்சிதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பணியில் இருக்கும்போது பெண்ணை தாக்கிய தீட்சிதர் தர்‌ஷனை கோவில் பூஜை பணியிலிருந்து 2 மாதங்கள் சஸ்பெண்டு செய்தனர். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே தீட்சிதரை கைது செய்யக்கோரி செவிலியர் சங்கம், மே17 இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர் பால. அறவாழி, தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர் பாசறை குமரன், புரட்சிகர மாணவர் முன்னணி மாவட்ட தலைவர் மணியரசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்னும் 2 நாட்களுக்குள் தீட்சிதர் தர்‌ஷன் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில இணை செயலாளர் மணிமேகலை கூறுகையில், செவிலியர் லதாவை தாக்கிய தீட்சிதரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, நர்சை தாக்கிய தீட்சிதர் தர்‌ஷன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை. காவல் துறையினரே அவருக்கு பாதுகாப்பு தருகிறார்கள். உடனடியாக அவரை கைது செய்யவில்லை என்றால் மிக பெரிய அளிவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

முன்னதாக அவர் நடராஜர் கோவிலில் தாக்கப்பட்ட நர்சு லதாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

மக்கள் இயக்கங்கள் தீட்சிதர் தர்சனை கைது செய்ய போராடி வருவதால் போலீஸ் கைது செய்து  அவரை கோர்டில் நிறுத்தி தண்டிக்க கூடாது என்பதற்காக முன்கூட்டியே பொது தீட்சிதர்கள் அவசர கூட்டம் செயலாளர் பாலகணேசன் தீட்சிதர் தலைமையில் நடத்தப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அபதாரமும் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top