காஸ்மீர் விவகாரம்;பரூக் அப்துல்லாவை வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்; மக்களவையில் எதிர்க்கட்சி முழக்கம்

காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி பிரச்சினை எழுப்பினார்.

பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அப்போது முத்தலாக் தடைச்சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மக்களவையில் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கேள்வி நேரத்தில் பங்கேற்று கேள்விகளை முன் வைத்தனர்.

எம்.பி. சுரேஷ் நாராயணன், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது பற்றிய கேள்வியை எழுப்பினர். பிரேமச்சந்திரன், காஷ்மீரில் மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

பொதுத்துறை வங்கிகளில், கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடந்த விவகாரம் தொடர்பாக எம்.பி. அன்னபூர்ணா தேவியும், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக உமேஷ் ஜாதவும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி பிரச்சினை எழுப்பினார்.

அவர் பேசுகையில் ‘‘காஷ்மீரில் 108 நாட்களாக கட்டுப்பாடு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவித காரணமுமின்றி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் உள்ளனர்.

எம்.பி.யான அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அவரை விடுவிக்க வேண்டும். அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவரை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்’’
இவ்வாறு ஆதிரஞ்சன் சவுத்திரி பேசினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மக்களவையின் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் மக்களவையில் சற்று நேரம் அமளி நீடித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top