சென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை

சென்னை நகரில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது அதை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துர்நாற்றம் அடித்தது. மேலும் பல  வேதிப்பொருட்கள் கலந்து இருக்கின்றது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது

இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) செய்த 11 சோதனைகளில் 10-ல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 20 மாநிலத் தலைநகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறும்போது, “பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீரின் தரம், வரையறுக்கப்பட்ட அளவில் இல்லை. இதையடுத்து குடிநீரின் தரத்தை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய நுகர்வோர் நலத்துறை கடிதம் எழுதியுள்ளது. தற்போது குழாய் மூலம் வழங்கப்படும் நீரின் தரம் மோசமானதாக இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதை மாற்றுவது தொடர்பான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படவுள்ளது. ஹைதராபாதில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அதில் பீனலிக் எனப்படும் பொருள் இருந்தது. அதைப் போல புவனேஸ்வரில் குளோரமைன்கள் கிடைத்தன.

சென்னை நகரில் வழங்கப்படும் குடிநீரை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துர்நாற்றம் இருந்தது தெரியவந்தது. மேலும், குளோரைட், புளூரைட், அமோனியா, போரான், காலிபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் இருந்தன. இதனால் இங்கு குடிநீரின் தரம் மிகவும் குறைந்து காணப் படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சண்டிகர், குவாஹாட்டி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தாவிலும் இதுபோன்ற நிலைதான் இருந்தது” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top