ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு

திருச்சியில் ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு மலையாளம் இடம் பெற்றிருப்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


ரெயில்வேயில் அலுவலக மொழியாக இந்தி, ஆங்கிலம் இருந்தாலும் பயணிகளுக்காக அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் தமிழகத்தில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. ரெயில் நிலையங்களில் ஆங்கிலம், இந்தி பெயர்ப்பலகை இருந்தாலும் தமிழிலும் பெயர்ப்பலகை இருக்கும். மேலும் வண்டியின் பெயர், புறப்படும் மற்றும் சேரும் ஊரின் பெயர் பலகை, ரெயில் நிலையத்தில் ஊர் பெயர் பலகை ஆகியவை தமிழிலிலும் இருப்பதை காணமுடியும்.

மேலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் ஒரு பகுதியில் ஆங்கிலம், இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு பகுதியில் தமிழ் மொழி இடம் பெற்றிருக்கும். ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய வரும் பயணிகள் பெரும்பாலும் படிவத்தில் தமிழ் மொழியில் விவரங்களை நிரப்புவது உண்டு. ஒரு சிலர் ஆங்கிலத்தில் நிரப்புவார்கள். வட மாநிலத்தினர் இந்தியை பயன்படுத்துவது உண்டு.


இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டரில் வினியோகிக்கப்படும் படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் தமிழ் மொழிக்கு பதிலாக மலையாளம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்பகுதியில் இந்தி, ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தாய் மொழியான தமிழ், டிக்கெட் படிவத்தில் இடம் பெறாததை கண்டு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கவுண்ட்டரில் உள்ள ஊழியர்களிடம் பயணிகள் சிலர் கேட்ட போது அவர்கள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அந்த படிவத்திலே நிரப்பும்படி கூறியுள்ளனர். இதனால் முன்பதிவு படிவத்தை நிரப்ப பயணிகள் பலர் சிரமம் அடைந்து வருகின்றனர். அருகில் உள்ளவர்களிடம் படிவத்தை நிரப்பி தரும்படி உதவி கேட்டு டிக்கெட் பெறுகின்றனர். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் காலதாமதமும் ஏற்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “ரெயில்வேயில் தமிழ் மொழியை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர். நீண்ட காலமாக இருந்து வந்த நடைமுறையை மாற்றி உள்ளனர். இதனை கேட்டால் ரெயில்வே ஊழியர்கள் எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. டிக்கெட் படிவத்தில் தமிழ் மொழியை மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும், தமிழ் ஆர்வலர்களும் ரெயில்வே வாரியத்திடம் வலியுறுத்தி தமிழ் மொழியின் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறுகையில், “ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தை சென்னையில் இருந்து அதிகாரிகள் பெறுவது உண்டு. இதில் கேரள மாநிலத்திற்குரிய டிக்கெட் படிவத்தை தவறுதலாக பெற்று வந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் மலையாளம் அதில் இடம்பெற்றுள்ளது” என்றனர்.

மொழிக்காக போராட்டம் நடத்திய திருச்சியில் ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்தனர். ரெயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் இடம்பெற செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இல்லை என்றால் பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுருப்பதாக பயணிகள்  கூறினர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top