கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ரஞ்சன் கோகோயை மூத்த வழக்கறிஞர்கள் வரவேற்றனர்

 “கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் கடந்த 2018 அக்டோபர் 3-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக் காலத்தில் அயோத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் 65 வயதை எட்டுவதால் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

அவருக்கு நேற்று கடைசி பணி நாள். இதையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் முதலாவது அறை எண்ணுக்கு சென்று 5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 40 ஆண்டுகள் வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். அப்போது சட்டத்தின் வலிமையை நேரில் உணர்ந்தேன். என்னால் முடிந்த வரை சிறப்பாக பணியாற்றினேன். உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) நீதிபதிகளுக்கு பேருதவிகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் செயல்படும் பார் கவுன்சில்களுக்கு எஸ்சிபிஏ முன் னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பேட்டியளிக்க நேரம் ஒதுக்குமாறு ஊடகங்கள் தரப்பில் கோகோயிடம் கோரப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நீதிபதிகள் மவுனம் காப்பது நல்லது. அதற்காக நீதிபதிகள் பேசக்கூடாது என்று கூறவில்லை. தேவைப்படும்போது, சூழ்நிலை எழும்போது பேசலாம். கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் மாலையில் எஸ்சிபிஏ சார்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்ட மூத்த நீதிபதிகள், மூத்த வழக் கறிஞர்கள் பங்கேற்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகோய், கடந்த 1978-ம் ஆண்டில் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். வரி, நிறுவனம் தொடர்பான வழக்குகளில் அதிகமாக ஆஜரானார்.

கடந்த 2001 செப்டம்பர் 1-ம் தேதி குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2010 செப்டம்பரில் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2011 பிப்ர வரியில் அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 2012 ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018 அக்டோபர் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். வடகிழக்கு மாநிலத்தில் இருந்து தலைமை நீதிபதியான முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top