பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, தற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை நிர்ணயிப்பதும், பதவி உயர்வு வழங்குவதும் சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்காக 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் கூட, சமூக நீதியின் பார்வையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக 2003-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை சமூக நீதியைக் காக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், அந்த நடைமுறை செல்லாது என்று கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை 2016-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016-ம் ஆண்டில் சில திருத்தங்களை செய்த தமிழக அரசு, 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளைச் சேர்த்தது. இந்தப் பிரிவுகளின்படி தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் தமிழக அரசுத் துறை பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மறைமுக இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பின்தேதியிட்டு பணிமூப்பு வழங்கும் பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பலர் கடுமையாக பாதிக்கப்படுவர். இது தேவையற்ற குழப்பங்களையும், பணியிடங்களில் சங்கடங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

சட்டத்தின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் வகுத்துக் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களின்படியும் பார்த்தால் இந்தத் தீர்ப்பை குறை கூறவோ, விமர்சிக்கவோ முடியாது. அதேநேரத்தில் நியாயத்தின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், நியாயமற்ற காரணங்களின் அடிப்படையில் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி உயர்வு வழங்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்படவில்லை; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தேவைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, தானாக வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற இரு அம்சங்கள் தான் இந்தத் தீர்ப்பின் அடிப்படை ஆகும். ஆனால், பணி நியமனங்களில் மட்டுமின்றி பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியின் அடிப்படை ஆகும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்த நிலை பணியில் சேர்ந்தனரோ, அதே நிலை பணியிலேயே ஓய்வு பெறுவது எந்த வகையில் சமூக நீதியாக இருக்க முடியும்?

அதேபோல், தமிழக அரசுத் துறைகளாக இருந்தாலும், மத்திய அரசுத் துறைகளாக இருந்தாலும் உயர்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை. தேவையின் அடிப்படையில் தான் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை இந்தக் காரணம் நியாயப்படுத்துகிறது. இத்தனை நியாயங்களுக்குப் பிறகும் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு தடையாக இருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் தான். சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காக அதில் தேவையான திருத்தங்களை செய்வதில் தவறில்லை.

மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் 16-வது பிரிவில் 4ஏ என்ற உட்பிரிவைச் சேர்ப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 117-வது திருத்தத்தை மத்திய அரசு செய்தது. இதன் மூலம் அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதே உட்பிரிவை திருத்தி ‘‘மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’’ என்ற சொற்களைச் சேர்ப்பதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, அதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top