தமிழக அரசு ஏமாற்றுகிறது; போராட்டத்தை கைவிட்ட பின்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை; டாக்டர்கள் குற்றச்சாட்டு

போராட்டத்தை கைவிட்ட பின்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தமிழக அரசு மீது டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர்கள் கடந்த மாதம் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை கைவிட்டுவிட்டு வந்தால், கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் உறுதியளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட டாக்டர் சங்கங்கள், வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஆனால் போராட்டங்களை கைவிட்டு 2 வாரங்கள் ஆகியும் இதுவரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு டாக்டர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு அளிப்பதாக முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் அளித்த உறுதியை ஏற்று எங்கள் போராட்டங்களை நிபந்தனை இன்றி தள்ளிவைத்தோம். பின்னர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்து எங்களுடைய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தோம்.

அப்போது, அடுத்த வாரம் அழைத்து பேசுகிறோம் என பதிலளித்தனர். ஆனால் போராட்டம் முடிந்து 2 வாரங்கள் ஆகியும், பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதுவரை 6 முறை நாங்கள் சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்திருக்கிறோம். ஆனால் எந்த பலனும் இல்லை.

இதுவரை எங்களை அழைத்து பேசாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொது நல வழக்கில், அரசு டாக்டர்கள் கோரிக்கையை பிப்ரவரி மாதத்துக்குள் கூட்டம் நடத்தி முடிவெடுத்து 3 வாரத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 10 மாதங்கள் கடந்த பிறகும் எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

எனவே உடனடியாக அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை அழைத்து பேசி சுமுக தீர்வு காணவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களில் 118 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதை அரசு ரத்து செய்ய வேண்டும்.என்று அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top