தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவானது;தாலுகாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்டங்கள்.37மாவட்டங்களாக மாற்றப்பட்டிருக்கிறன

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது

இதுபோல நெல்லையை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் வேலூரை 3 ஆக பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

புதிதாக உதயமாகும் மாவட்டங்களில் இடம் பெறும் வருவாய் கோட்டங்கள், தாலுகாக்களை எவை என்பதை அரசு நேற்று வெளியிட்டது.

புதிய மாவட்டங்களை உருவாக்கி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

காஞ்சீபுரம் மாவட்டத்தின் கீழ் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் இடம் பெறுகிறது. இந்த மாவட்டத்தில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் (புதிது) ஆகிய 5 தாலுகாக்கள் வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூரை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்படும் வருவாய் கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்கள் இடம் பெறும். காஞ்சீபுரம் வருவாய் கோட்டத்தின் கீழ், காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய தாலுகாக்கள் வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் இடம் பெறும். செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுங்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் (புதிது) ஆகிய 8 தாலுகாக்கள் இம்மாவட்டத்தின் கீழ் வருகின்றன.

செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுங்குன்றம் ஆகிய தாலுகாக்களும், தாம்பரம் வருவாய் கோட்டத்தின் கீழ் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களும் இடம் பெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட பிறகு திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் திருநெல்வேலி, சேரன்மகாதேவி ஆகிய வருவாய் கோட்டங்கள் இடம் பெறும். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திசையன்விளை ஆகிய 8 தாலுகாக்கள் இம்மாவட்டத்தின் கீழ் வரும்.

தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி, சங்கரன்கோவில் (புதிது) ஆகிய 2 கோட்டங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்களும் வரும்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணைநல்லூர் (புதிது), திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுக்காக்கள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, கல்வராயன்மலை (புதிது) ஆகிய 6 தாலுகாக்கள் இடம் பெறுகின்றன.

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படுகிறது.

அதன்படி திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி (புதிது) ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 தாலுக்காக்கள் வருகின்றன.

ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் (புதிது) ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய 4 தாலுக்காக்களும் இடம் பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் (புதிது) ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம் (புதிது) ஆகிய 6 தாலுக்காக்களும் இடம் பெறும்.

இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரிகள் மாவட்ட ஆவணங்கள் பிரிப்பு பணியில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் அரசு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்கனவே ஊராட்சி சட்டத்தின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன்படி எல்லை மறுசீரமைப்பு பணிகளும் ஏற்கனவே முடிந்துவிட்டன.

மாவட்ட பிரிப்பு தொடர்பான ஆணைகள் ஒருபக்கம் இருந்தாலும்கூட, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 17-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடரும். ஏதாவது மாற்றங்கள் இருந்தால், அதை அரசு மேற்கொள்ளும்.என்று அறிக்கை சொல்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top