சிலைகளை மீட்டது பிரதமர் மோடியா பொன்மாணிக்கவேலா? உயர்நீதிமன்றத்தில் ருசிகர வாதம்

சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், அதுவே இறுதி உத்தரவாகும் எனவும், அந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது எனவும் வாதிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் பொன்மணிக்கவேல், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த ஓராண்டாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிக்கு வழங்கவில்லை என்றும், வரும் 30-ம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கு வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றமே சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவர் கூடுதல் டிஜிபி என்றும் அதன் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் கூடுதல் டிஜிபிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், பொன்மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த அறிக்கையும் கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் அரசுடன் ஒத்துழைக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக பொன்மாணிக்கவேல் கூறிக் கொள்ளும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை என்றும், யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமரின் கோரிக்கை அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், பொன்மாணிக்கவேல் மீட்டதாக தவறான செய்திகளை பரப்புவதாகவும் பத்திரிகை செய்திக்காக தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொன்மாணிக்கவேல் மீட்கவில்லை என்றால் அரசு அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கபடாமல், பொன்மாணிக்கவேல் வசம் எப்படி ஒப்படைக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாநில அரசின் பிரதிநிதி என்று கூறி பொன்மாணிக்கவேல் சிலைகளை மீட்டதாகவும், அந்த சிலையை அது பற்றிய தகவல்கள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தமிழக காவல்துறையில் சிறந்த அதிகாரிகள் இருக்கும் போது, ஒருவரை மட்டுமே சிறந்தவர் என்று கூற முடியாது என்றும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மீண்டும் புனரமைத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில் பாமக கட்சி தலைவர் இராமதாஸ் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள்  அலுவலக கார்பார்க்கிங்கில் சீரழிகிறதுஅவைகளை முறையாக அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top