திமுக பொதுக்குழு கூட்டம்;இடஒதுக்கீடு,விகிதாசாரமுறை தேர்தல்,மற்றும் பாஜக ,அதிமுகவுக்கு எதிராக தீர்மானங்கள்

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. உடல்நலக்குறைவால் பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்கவில்லை. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொதுக்குழுவின் நிறைவில் ஸ்டாலின் பேசியதாவது:2014-ல் மக்களவையில் திமுகவுக்கு ஒரு எம்.பி.கூட இல்லை. ஆனால், தற்போது 24 பேர் எம்.பி.யாக உள்ளனர். 2016-ல் 89 ஆக இருந்த திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இப்போது 100 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை சுற்றியே தமிழக அரசியல் நடக்கிறது.

கருணாநிதியைப் போல என்னால் பேச, எழுத, உழைக்கத் தெரியாது. ஆனால், எதையும் முயற்சித்துப் பார்க்கும் துணிவு உண்டு. அதனை கருணாநிதி எனக்கு கற்றுத் தந்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக, திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக என் சக்தியையும் மீறி நான் உழைப்பேன்.

மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் மூலம் கட்சியில் என்ன நடக்கிறது, அடிமட்ட நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் சிலர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். கட்சியின் வளர்ச்சிக்காக போட்டி போட்டிக் கொண்டு செயலாற்றுவதில் கோஷ்டி இருக்கலாம். ஆனால், அது தனிப்பட்ட பகையாக மாறிவிடக் கூடாது.

மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தியபோது தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறியிருந்தேன். இப்போதும் அதையே கூறுகிறேன். கட்சி வளர்ச்சிக்காக நாளடைவில் சர்வாதிகாரியாக மாறுவேன். தவறு செய்யும் நிர்வாகிகள் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். நம்மை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று நினைத்து விடக்கூடாது.

என்னதான் அதிமுக அதிகாரத்தையும் பணபலத்தையும் பயன்படுத்தினாலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக அடைந்தது மிகப்பெரிய தோல்வி. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து களைய வேண்டும். அடிமட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சி நிர்வாகிகள் மக்களோடும் தொண்டர்களோடும் இரண்டற கலந்து பழக வேண்டும். அனைத்து நேரங்களிலும் கட்சிப் பணியாற்ற வேண்டும்.

திமுகவினரிடம் ஒற்றுமையும் உழைப்பும் குறைந்து வருகிறது. இதனை சரிசெய்ய வேண்டும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திமுகதான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நம்மை அவ்வளவு எளிதாக வெற்றிபெற விட மாட்டார்கள். மத்திய, மாநில அரசுகள் திமுகவுக்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். மிசா சட்டத்தில் நான் கைதாகவில்லை என்றும் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இனி வரும் காலம் திமுகவுக்கு சவாலானதாக இருக்கப் போகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அனைத்தையும் எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். அதற்காக திமுகவினர் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகத்தைப் பூட்டவேண்டும் என்று கூறுகிறார். நாங்கள் ஒன்றும் கையாலாகாதவர்கள் அல்ல. இனி வரப்போகும் காலம் நமக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப்போகிறது. எந்தச் சவாலையும் சந்திப்போம். இந்த பொதுக்குழுவில் நாம் எடுக்கவேண்டிய உறுதி, கோட்டையைவிட்டு கொள்ளைக் கூட்டத்தை விரட்டிடுவோம் என்பதுதான்.இவ்வாறு அவர் பேசினார்.

* சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


உள்கட்சி தேர்தல் நடக்கும்வரை கட்சியின் நிர்வாகிகள் அதே பதவியில் தொடர அனுமதி அளித்தும், திருநங்கைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் திமுகவில் சேரவும், இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கவும், திமுக இளைஞரணியில் 18 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும் கட்சி விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.


தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் திமுகவை பலப்படுத்தி பொதுக்குழு, செயற்குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலமின்றி இருப்பதால் கட்சியில் ஒருவரை சேர்த்தல், நீக்குதல் போன்ற அதிகாரங்களை திமுக தலைவர் மேற்கொள்ளும் வகையில் கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.


பொதுக்குழுவில் பேசிய பலரும் மாவட்ட, ஒன்றிய அளவில் பல கோஷ்டிகள் இருப்பதாகவும், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ‘தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்’ என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.


தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் திமுகவில் கிளைகளாக உள்ளன. இவை பெரிதாக இருப்பதால் 99,420 கிராம ஊராட்சி வார்டுகளையும் கட்சி கிளைகளாக மாற்ற விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கிளைச் செயலாளர்களின் எண்ணிக்கை 99,420 ஆக அதிகரிக்கும்.

* ஊழல்களின் உறைவிடமாகவும், மக்களை வாட்டி வதைத்துவரும் அ.தி.மு.க. ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* ஊழலில் திளைத்திடும் அ.தி.மு.க. அமைச்சர்களை வருமான வரித்துறை சோதனை மற்றும் உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* பா.ஜ.க அரசின் பல்வேறு தமிழ்-தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணைபோவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டிட பாடுபட வேண்டும்.


* பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை அ.தி.மு.க. அரசு வலியுறுத்த வேண்டும். அவர்களை கவர்னர் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

* சென்னையின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மெகா குடிநீர்த் திட்டங்களையும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.

* திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்திட வேண்டும்.

* கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பின் மீதான மக்களின் சந்தேகத்தை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும்.


* காஷ்மீரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும்.


* கீழடி அகழாய்வு பணியை தொய்வின்றி நடத்தி அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

* பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்திட வேண்டும்.

* புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். கல்வி அதிகாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானங்கள் சிலவற்றை நிறைவேற்றினார். அதன் விவரம் வருமாறு:-

சிறப்பு தீர்மானங்கள்

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்புகள் சிதைக்கப்படுவதை தி.மு.க. ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. நாட்டில் மாநிலங்கள், மாவட்டங்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் என பிரித்து ஒரே நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பா.ஜ.க. திட்டமிடுகிறது. இது கைவிடப்பட வேண்டும்.

22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்குவது போன்றவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மத்திய அரசில் தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.மற்றும் தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்தவேண்டும்

இவ்வாறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top