பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (RCEP)இணையப் போவதில்லை: இந்தியா முடிவு!

16 நாடுகள் இணையும் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Partnership-RCEP) இந்தியா இணையப்போவதில்லை என்று இந்தியா முடிவெடுத்துள்ளது .

பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் அக்கறைகள் குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இதில் இந்தியா இணையாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் உலகில் பல நாடுகளோடு இந்தியா வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் பல செய்திருக்கின்றன. ஆனால் தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முரண்கள் அதிகமானதை அடுத்து புதிய ஒப்பந்தங்களுக்கான தேவை உருவாகியிருக்கிறது. அதை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் RCEP ஆகும்.

இந்த அமைப்பில் சிங்கப்பூர் மலேசியா உட்பட ஆசியான் நாடுகளும் இவற்றுடன் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து என மொத்தம் 16 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த அமைப்பில் இணையும் நாடுகள் ஒன்றோடு ஒன்று தங்கு தடையின்றி பொருள்களை ஏற்றுமதி-இறக்குமதி செய்வதற்கு வழி வகை செய்கிறது. ஏற்கனவே இதே வர்த்தகக் காரணங்களுக்காக இந்தியா இந்த அமைப்பிலுள்ள நாடுகளோடு தனித்தனியாக ஒப்பந்தங்கள் போட்டிருந்தாலும், இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

ஏனென்றால் இதுவரை செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களில் மத்திய மாநில அரசுகள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள், சேவைகள் உள்ளிட்ட எதையும் ஒப்பந்தத்திற்குள் இந்தியா சேர்த்ததில்லை.ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இவையனைத்தையும் சேர்க்கும் சரத்துகள் இருக்கின்றது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பல மக்கள் அமைப்புகள் இந்தியாவெங்கும் போராடியிருக்கிறது குறிப்பாக தமிழகத்தில் மே பதினேழு இயக்கம் விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்தி இருந்தது

ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இனிமேல் அரசுத்துறை நிறுவனங்கள் எதுவும் பொருள்களை உற்பத்தி செய்பவர்களிடமிருந்து கொள்முதல் செய்யாது. பொருள்களை கொள்முதல் செய்யவில்லை என்றால் ஏழை எளிய மக்களுக்கு சரியான விலையில் பொருட்களை கொண்டு போய் சேர்க்கும் வழிமுறை தடுக்கப்படும். இந்தியாவின் அனைவருக்கும் ஊட்டசத்துள்ள உணவு என்பது பகல் கனவாகிப்போகும்.என பேசப்பட்ட நிலையில் இந்தியாவின் முடிவு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது .

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியாவின் நிலைப்பாடு உலகநாடுகளிடையே இந்தியாவின் வளர்ச்சி, மதிப்பு பற்றிய பிரதிபலிப்புமாகும். இந்நிலையில் இந்த விரிவான ஒப்பந்த கூட்டுறவில் இந்தியா இணையாமல் இருப்பது  இந்திய விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கூடங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மக்கள் இயக்கங்களின் அழுத்தம் காரணமாக இந்தியா தற்காலிகமாக விலகி இருக்க முடிவு எடுத்திருக்கலாம் என  அரசு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நடைமுறைச் சாதக பாதகங்கள் பற்றியதாகும், இதனால் ஏழைகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தியச் சேவைத் துறைக்கு சாதக பலன்களை அளிக்கும் முயற்சியுமாகும்.

பல துறைகளிலும் உலகச் சந்தைப் போட்டிகளை திறந்து விடுவதில் இந்தியா பின் வாங்கவில்லை என்றாலும் இதன் மூலம் அனைத்து நாடுகளும் அனைத்துத் துறைகளும் பயனடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வலுவாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.சி.இ.பி.யில் 10 ஆசியான் நாடுகளும் 6 சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நாடுகளுமான சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அடங்கிய 16 நாடுகள் கொண்டதே இந்த ஆர்.சி.இ.பி. ஆகும். பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டுறவு நாடுகள் உருவாக்கத்தின் பிரதான நோக்கம் என்னவெனில் இந்த 16 நாடுகளின் 3.6 பில்லியன் மக்கள் தொகை பயனடையும் விதமாக உலகின் மிகப்பெரிய சுதந்திர வாணிப மண்டலமாக இது மாற வேண்டும் என்பதே.

இந்நிலையில் சனிக்கிழமையன்று 16 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியா அடையாளப்படுத்திய நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியச் சந்தையில் சீனாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் கொண்டு குவிக்கப்படும் என்று கவலை தெரிவித்த இந்தியா சந்தை அணுக்கம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய உற்பத்திப் பொருட்கள் பற்றிய பிரச்சினைகளை கூட்டத்தில் எழுப்பியது. ஆனால் இதில் தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பாக, ஆர்.சி.இ.பி. உச்சி மாநாடு தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக (கிழக்கு) செயலர் விஜய் தாக்கூர் சிங் பாங்காக்கில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இந்தியா இணையப்போவதில்லை என்பதை தெரிவித்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் ஒப்பந்தத்தில் இணையாமல் இருப்பதே சரியான முடிவு என்று கருதுகிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில் இந்தியா இல்லாது 15 நாடுகளுடனான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு கையெழுத்தாகும் என்று தெரிகிறது. இந்தியாவுக்கும் இணைய கால அவகாசம் உள்ளதாக ஆர்.சி.இ.பி நாடுகள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்தியா அடையாளப்படுத்திய, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை.என்று கூறப்பட்டாலும் இந்தியா எந்தவிதமான பிரச்சனைகளை முன்வைத்தது என்று சொல்லவில்லை அது மக்களுக்கானதா இல்லை முதலாளிகளுக்கானதா? என்பது போகப்போகத்தான் தெரியும். தற்போது தற்காலிகமான நிம்மதி கிடைத்திருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top