டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் – வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் வெடித்தது  மோதலின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் குற்றவாளிகளை ஏற்றிவந்த சிறை வாகனத்தின் மீது ஒரு வக்கீலின் கார் மோதியதால் அந்த வக்கீலுக்கும் போலீசாருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இதை தொடர்ந்து அந்த வக்கீலை லாக்-அப்புக்கு அழைத்து சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை விடுவிக்க 8 நீதிபதிகள் சென்றனர். ஆனால், போலீசார் விடுவிக்க மறுத்து விட்டனர்.

அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் தெரிவித்தாலும் இதை போலீசார் மறுத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்ற வாயிலில் வக்கீல்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அராஜகத்தை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலவரத்தடுப்பு வாகனங்கள் உள்பட ஏராளமான போலீஸ் வாகனங்கள் அங்கு வந்து சேர்ந்தபோது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் பெரிய அளவில் மோதல் வெடித்தது. அப்போது ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் தீயிட்டு எரிக்கப்பட்டது.

மேலும் சில போலீஸ் வாகனங்கள் கல்வீச்சு சம்பவத்தில் சேதமடைந்தன. அந்த பகுதி முழுவதும் சில நிமிடங்களுக்கு போர்க்களம் போல் காட்சியளித்தது. போலீசாரின் தாக்குதலில் காயமடைந்த இரு வக்கீல்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லிக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வரும் 4-ம் தேதி (திங்கட்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என டிஸ் ஹஸாரி வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top