அரசு டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிப்பு: மிரட்டும் அமைச்சர்; 5 ஆயிரம் ஆபரே‌ஷன்கள் தள்ளிவைப்பு

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. டாக்டர்கள் இல்லாததால் 5 ஆயிரத்துக்கும் மேலான ஆபரேஷன்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். கடந்த 25-ந்தேதி தொடங்கிய ‘ஸ்டிரைக்’ இன்று 6-வது நாளாக நீடிக்கிறது.


நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.டாக்டர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாலும், காய்ச்சல் பிரிவுகளிலும் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் நோயாளிகளின் நலன் கருதி கையெழுத்து போடாமல் டாக்டர்கள் ஒரு சிலர் பணியாற்றி வருகின்றனர்.

மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும், வார்டுகளும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளன. புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அவை 6 நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் உள்நோயாளிகள் நோயின் தாக்கம் அதிகமாகி அவதிப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டு தினமும் நடைபெறுகின்ற இதுபோன்ற ஆபரே‌ஷன்கள் முடங்கியதால் நோயாளிகளின் உறவினர்களும் நீண்டநாட்களாக தங்கி சிரமப்படுகின்ற நிலை உருவாகி உள்ளது.

அவசர ஆபரே‌ஷன்கள் மட்டுமே டாக்டர்கள் செய்து வருகின்றனர். மற்ற அறுவை சிகிச்சை புறக்கணிக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான ஆபரே‌ஷன்கள் டாக்டர்கள் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த 5 டாக்டர்களில் 3 பேர் மயக்கம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் பெருமாள் பிள்ளை, நீர் முகிப் அலி ஆகியோருடன் டாக்டர்கள் நளினி, பாண்டிதுரை ஆகிய இருவரும் இணைந்தனர்.

டாக்டர்கள் வேலைநிறுத்தம் தீவிரமாகி வரும் நிலையில் அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடத்தாமல், ஆறுமாதமாக டாக்டர்கள் கோரிக்கையை செவிமடுக்காமல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டதால் அதனை டாக்டர்கள் ஏற்கவில்லை.

இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலைவிட வேண்டும் அதுவரை வேலைநிறுத்தம் தொடரும், அமைதியாக போராட்டம் நடத்திவரும் எங்களை அச்சுறுத்துவது, கைது செய்வது போன்றவைகள் நடந்தால் தமிழகம் முழுவதும் காய்ச்சல், அவசர சிகிச்சை பணிகளையும் முழுமையாக புறக்கணிப்போம் என்று டாக்டர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘6 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட ஆபரே‌ஷன்கள் நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ இந்த அரசு மக்களை பற்றி கவலைப் பட மறுக்கிறது என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top