பேச்சு வார்த்தை தோல்வி;அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 5 டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு அளவில் அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்றுகின்றனர்.

அரசு டாக்டர்கள், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும், பட்டமேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.

2 மாத காலம் ஆகியும் கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது.  கடந்த 25ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவோ எந்தவித உத்தரவாதமும் தராததால், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

4 அரசு டாக்டர்கள் சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சை கிடைப்பதால் அதனை நம்பி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ செலவு செய்ய வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி உயிர் வாழ்கின்றனர்.

புறநோயாளிகள் சேவை முற்றிலும் முடங்கியதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். தேர்வு செய்யப்பட்ட சிறிய பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. அதனை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதயம், நரம்பு, கல்லீரல், எலும்பு முறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளும் டாக்டர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டன.

இதேபோல ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் டாக்டர்களின் வேலைநிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சென்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை  நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் அறிவித்தனர்.  நேற்று 2வது நாளாகவும் இந்த போராட்டம் நீடித்தது.

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்களின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் நீடித்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top