அரசு டாக்டர்களுக்கு இது கருப்பு தீபாவளி; 2-வது நாளாக தொடரும் ஸ்டிரைக்; கண்டுகொள்ளாத அரசு!

அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினார்கள். 4 டாக்டர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்கின்றன.


15 ஆயிரம் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு எந்தவிதமான அக்கறையும் கொள்ளாமல் இருக்கிறது

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அரசு டாக்டர்களின் போராட்டத்தினால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டன.

ஏற்கனவே இவர்கள் அரசிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்படாததால் இந்த போராட்டம் எண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்

சில மருத்துவமனைகளில் புறநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பயிற்சி மருத்துவர்கள் மற்றும் அரசு சாராத முதுநிலை மருத்துவ மாணவர்களை கொண்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்றனர். பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற முடியாமல் திரும்பி போனார்கள்.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கீழ் 18 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

அனைத்திலும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பிரச்சனையில் தலையிடக் கோரி மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, சுரேஷ், ரமா, பாலாமணி, பீர்அலி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நடைபெற வேண்டிய ஆபரே‌ஷன்கள் நடைபெறவில்லை. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

தேர்ந்து எடுக்கப்பட்ட ஆபரே‌ஷன்கள் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலான ஆபரே‌ஷன்கள் டாக்டர்கள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றால் மட்டுமே வழக்கமாக நடைபெறும் அறுவை சிகிச்சைகள் நடைபெறும். இன்று 2-வது நாளாக புறநோயாளிகள் பிரிவும் ஆபரே‌ஷன்களும் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போராட்டம் குறித்து டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்து விட்டு செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள். மத்திய அரசு டாக்டர்கள் மற்றும் பிற மாநிலங்களில் டாக்டர்கள் பெறும் சம்பளத்திற்கும் தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் சம்பளத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

12 வருட மருத்துவ சேவையின் முடிவில் பிற மாநில டாக்டர்கள் ரூ.1.28 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் தமிழக டாக்டர்கள் ரூ.80 ஆயிரம் மட்டுமே வாங்குகிறார்கள்.

இந்த வேறுபாட்டை களைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசுக்கு பல்வேறு வழியில் டாக்டர்கள் வருவாய் ஈட்டி தருகிறார்கள்.

குறிப்பாக முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கிறது. அரசு டாக்டர்கள் கூடுதல் பணியின் காரணமாக அதிகளவில் ஆபரே‌ஷன்கள் செய்கின்றன.

அரசிடம் பணம் இருக்கிறது. ஆனால் மருத்துவர்களுக்கு செய்ய மனம் இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்.டெங்கு காய்ச்சல் பணி, அவசர ஆபரே‌ஷன் போன்றவற்றில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

தீபாவளிக்கு பிறகு நிலைமை மோசமாகும். அதனையும் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும். டாக்டர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு வழிவகை செய்யவில்லை. அதனால் கருப்பு தீபாவளியாகத்தான் அனுசரிக்கிறோம்.

அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்கவில்லை. பயிற்சி மருத்துவர்கள், அரசுசாரா முதுநிலை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.

தீபாவளிக்கு பிறகு முதுநிலை மருத்துவர்களும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளனர். அதனால் பாதிப்பு அதிகமாகும். நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என்று அரசு மூடி மறைக்கிறது.என்று அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top