2-வது நாளாக தொடரும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்!

queue_of_indian_student_450தமிழகத்தில் 20 மையங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப படிவங்கள் இரண்டாவது நாளாக இன்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.நேற்று ஒரு நாளில் மட்டும் 12,138 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 383 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2,172 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1,000 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னையில் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. மேலும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 900 இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது.

இந்நிலையில் 2014-2015-ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களின் விற்பனை 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை காலை தொடங்கியது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் ரூ.500-க்கான வரைவோலையை (டிடி) கொடுத்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் சாதி சன்றிதழ் காட்டி விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுச் சென்றனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் மருத்துவக் கல்வி இயக்ககம், செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஒரே விண்ணப்பம் தான். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் கட்டணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சுகாதாரத் துறையின் www.tnhealth.org, என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு 40 ஆயிரம் விண்ணங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விற்பனைக்கு பிறகு கவுன்சலிங் நடத்தப்படும்.

கவுன்சலிங் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதன்கிழமை மட்டும் தமிழகத்தில் 12,138 விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொறியியல் விண்ணப்ப விற்பனை 2 லட்சத்தை நெருங்குகிறது

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. 10-வது நாளான புதன்கிழமை 4,554 விண்ணப்பங்கள் விற்பனை ஆகின. இதுவரை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top