அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஒப்பந்த பணிகள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேண்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பினாமிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ள ரூ.14 கோடி மதிப்புள்ள ஒப்பந்த பணிகளும் அமைச்சரின் நண்பர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ள நிறுவனங்களே சென்னை மாநகராட்சி டெண்டர்களில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\

இதன்மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி ஒப்பந்த பணிகள் ஒதுக்குவதில் முறைகேடுகளை செய்துள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதேபோல தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதியும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஐகோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.


இந்த வழக்குகளை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த ஐகோர்ட்டு, இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி, “அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட டெண்டர் முறைகேடு புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மைச் செயலர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.

அப்போது விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆஜராகி, இந்த முறைகேடு புகார் தொடர்பாக 349 டெண்டர்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 117 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனால் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட டெண்டர்கள் தொடர்பான ஐ.பி., முகவரி குறித்து விசாரணை அதிகாரி முறையாக விசாரணை நடத்தவில்லை. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஓராண்டு ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரிக்க வேண்டும்.

இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல இந்த வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டும் இன்னும் அவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இது அவருக்கு இறுதிவாய்ப்பு. அவர் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற நவம்பர் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top