ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்

நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது ட்விட்டரில் தனது குடும்பத்தினர் மூலம் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

.இதையடுத்து, நாள்தோறும் இந்தியாவின் பொருளாதாரச் சூழல் குறித்தும், மத்திய அரசு உணரும் வகையில் இரு காரணிகளை ட்விட்டரில் பதிவிடுவேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது, வங்கிகள் கடன் வழங்கும் சதவீதம் சரிகிறது என்று நாட்டின் பொருளாதார சூழல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அமைப்பால் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் திஹார் சிறையில் உள்ளார். அவரை அமலாக்கப் பிரிவு 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ” என் சார்பில் எனது குடும்பத்தினர் இந்த ட்வீட்டைப் பதிவிடுகிறார்கள். இரு பொருளாதார அறிகுறிகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்கள் முடிவுக்கு வருவார்கள்.

முதலாவது, நாட்டின் ஏற்றுமதி 6.6 சதவீதம் சரிந்துவிட்டது. இறக்குமதி 13.9 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் வேலையிழப்பு ஏற்படுகிறது. இரண்டாவது, வங்கிகள் கடன் வழங்குவது குறைந்து கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை 5 மாதங்களில் ரூ.80 ஆயிரம் கோடியாக வீழ்ச்சியடைந்துவிட்டது. இதன் அர்த்தம் என்னவெனில், நடைமுறையில் எந்தவிதமான புதிய முதலீடுகளும் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட பொருளாதாரக் குறியீடுகளில், “இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர் நுகர்வுச் செலவு குறைந்துவிட்டது. இதன் அர்த்தம் ஏழைகள் குறைவாக நுகர்கிறார்கள்.

பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 112-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் நாட்டில் தீவிரமான பசியோடு இருக்கும் மக்கள் அதிகம்” எனத் தெரிவித்திருந்தார்.

               


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top