சிறப்பு அந்தஸ்து நீக்கம் எதிரொலி; ஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பாஜக அரசால் நீக்கப்பட்டு  யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை இன்று கலைத்து பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 1957-ம் ஆண்டு முதல் சட்ட பேரவை மற்றும் சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது.  அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 சட்டத்தின் படி அம்மாநிலத்தின் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சட்ட மேலவையில் பணியாற்றிவந்த 116 ஊழியர்களும் வரும் 22-ம் தேதியில் இருந்து தங்கள் வருகையை பொது நிர்வாகத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்ட மேலவை கட்டிடம், பர்னிச்சர், மற்றும் மின் சாதனங்களை எஸ்டேட்ஸ் இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுக்கு, வணிகம், சட்டசபை விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top